

"யாரோ என்னிடம் கேட்டதற்காகவோ, யாருடைய வேண்டுகோளுக்காகவோ அம்பேத்கர் சிலையை நான் இங்கு நிறுவவில்லை. இந்தச் சிலை வலுவான ஒரு செய்தியை நமக்குச் சொல்லுகிறது. தலைமைச் செயலகத்திற்கு வரும் ஒவ்வொரு அமைச்சருக்கும் இந்தச் சிலையைப் பார்க்கும்போது அம்பேத்கரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்."
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஏப்.14) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அம்பேத்கரின் 125 அடி சிலையை திறந்து வைத்த அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பேசிய வார்த்தைகளே இவை.
அந்த நிகழ்வில் கேசிஆர் மேலும் பேசியபோது, "அம்பேத்கர் ஜெயந்தி என்பதற்கு அன்று பாடல்கள் பாடுவது, நடனமாடுவது என்று மட்டும் அர்த்தமில்லை. மாறாக, நாம் அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அம்பேத்கரின் தேவை இன்றும் இருக்கிறது. அவருடைய கனவை நினைவாக்குவது நம்முடைய பொறுப்பு" என்றார்.
ரூ.146.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இச்சிலை 50 அடி உயர பீடத்தின் மீது 125 அடி உயரத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட சிலைக்காக 360 டன் துருபிடிக்காத இரும்பும், 114 டன் வெண்கலமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டிலேயே உயரமான இந்த அம்பேத்கர் சிலை தெலங்கானா தலைமைச் செயலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டிடத்திற்கு கேசிஆர் அரசாங்கம் ‘அம்பேத்கர்’ என்று தான் பெயர் சூட்டியுள்ளது. புதிய தலைமைச்செயலகத்திற்கும், அம்பேத்கரின் பேராசான் புத்தரின் சிலைக்கும் மத்தியில் அமைந்திருக்குமாறு இந்தப் புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது.
தேசிய அரசியலுக்கான பாதையா? - சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு தனது ‘தெலங்கானா ராஷ்ட்ர சமிதி’கட்சியை, ‘பாரதிய ராஷ்ட்ர சமிதி’ என தேசிய கட்சியாக பெயர் மாற்றினார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மாற்றாக தன்னை முன்னிருத்தும் முயற்சியாக இந்தப் பெயர் மாற்றம் முன்மொழியப்பட்டது. பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில் கேசிஆர் மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்ததை நாம் இங்கே நினைவுகூரலாம். இப்போதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளும் நிலையில் கேசிஆர் தனது நிலைப்பாட்டை இன்னும் சொல்லாதது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் தன்னை முன்னிருத்தும் அதேவேளையில், மாநிலத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்ட பாஜகவின் வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுக்கவும் இந்த தேசிய அரசியல் பிரவேசத்தை கேசிஆர் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தெலங்கானாவில் மட்டும் இல்லாமல், அண்டை மாநிலமான ஆந்திராவிலும் வலுவான மாநிலக் கட்சியாக வேரூன்றி நிற்கும் பிஆர்எஸ் தேசிய கட்சியாக பரிணமிக்க பிற மாநிலங்களில் அதற்கு அமைப்பு ரீதியான கட்டமைப்புகள் வேண்டும். கேசிஆரின் கட்சிக்கு அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
"தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை தேசிய அரசியல் என்ற பெயரில் சந்திக்க கேசிஆர் நினைக்கிறார். தேர்தல்கள் மாநில அளவிலும் முழக்கங்கள் தேசிய அளவிலும் உள்ளது. தேசிய கட்சி என்பதை தவிர அதில் தேசிய கொள்கை என்பது இல்லை. இது வரும் சட்டமன்ற தேர்தலுக்கானதே. முந்தையை தேர்தல்களில் பாஜகவால் ஏற்படுத்தப்பட்ட ஆபத்துகளை உணர்ந்து கூட்டாட்சி முன்னணி என்ற யோசனையை முன்வைத்தார். இப்போது தேசிய கட்சி என்ற யோசனையை முன்வைக்கிறார்" என்கிறார் அரசியல் விமர்சகரான தெலக்கப்பள்ளி ரவி.
ஜமீன் அடையாளம் துறக்கும் முயற்சியா அம்பேத்கர் சிலை திறப்பு: தேசிய அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாஜகவின் இந்துத்துவ கொள்கைக்கு மாற்றாக அம்பேத்கரை முன்னிறுத்த கேசிஆர் முயற்சிக்கிறாரா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. ஏனெனில் தெலங்கானாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருப்பது கவனிக்கத்தக்கது. அதன் ஒரு பகுதியாக தான் இந்த சிலைதிறப்பு என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சிலை மற்றொரு அரசியல் செய்தியினையும் சொல்வதாக கூறுகிறார் தெலக்கப்பள்ளி ரவி. அவர், "சிலை அரசியல் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகவே செயல்படுகிறது. குஜராத்தில் ஒற்றுமை சிலையைத் திறந்து பிரதமர் மோடி செய்ததை கேசிஆர் அம்பேத்கர் சிலை மூலம் செய்ய நினைக்கிறார். பிஆர்எஸ் தன்னை பிற்படுத்தப்பட்டவர்களுடன் அடையாளப்படுத்திக்காட்ட முயற்சிக்கிறது. அவர்கள் சமூக நீதிக்கு புதிய விளக்கத்தை உருவாக்க முயல்கிறார்கள். ஏனென்றால் எஸ்சி, எஸ்டி, மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. அந்த வகையில் இது ஒரு நல்ல முன்னெடுப்பு. இந்த சிலை நேரடியாக வாக்குகளாக மாறாமல் போகலாம். ஆனால் அதற்கான ஒரு சிறந்த பயிற்சியே" என்கிறார்.
சமூக சேவைக்கு அம்பேத்கர் விருது: கடந்த ஆண்டு, தலித் சமூகத்திற்கான மிகப் பெரிய திட்டமாக, தலித் பந்து என்ற திட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் தகுதியான தலித் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்ப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 50,000 தலித் குடும்பங்கள் தலிக் பந்து திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டில் அது 1,50,000 குடும்பங்களுக்கு நீடிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை நிகழ்வில் முதல்வர் கேசிஆர் அறிவித்தார்.
அதேபோல, இந்த ஆண்டு சிறந்த சமூக சேவை செய்பவர்களுக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.51 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக சந்திரசேகர ராவ் அறிவித்திருக்கிறார். வெலமா சமூகத்தைச் சேர்ந்த கேசிஆர் எப்போதும் ஒரு ஜமீன் காலாச்சாரத்துடனேயே அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த சிலையை நிறுவுவதன் மூலம் அவர் அதனைத் துறக்க முயற்சிக்கிறார்” என்றார்.
ஆனால், “கேசிஆர் ஒரு தலித் துரோகி. அவர், தலித் ஒருவரை முதல்வராக்குவேன் என்று வாக்களித்தார். அதை நிறைவேற்றவில்லை. தலித்துகளுக்கு மூன்று ஏக்கர் நிலம் தருவேன் என்று சொன்னதையும் நிறைவேற்றவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக எந்த அம்பேத்கர் ஜெயந்தியிலும் கலந்து கொள்ளாத ஒருவர், இப்போது வாக்குக்காக அவரது பெயரை உபயோகிக்கிறார் என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைக்கிறார் தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார்.
அதேபோல, மூத்த காங்கிரஸ் தலைவர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, “கேசிஆருக்கு தலித் சமூகத்தின் மீது இவ்வளவு அக்கறை இருக்கும் போது அவரது அமைச்சரவையில் ஏன் ஒரு தலித் அமைச்சர் கூட இல்லை?” என்று கேள்வி எழுப்புகிறார்.
"ஒரு சிலை, குறிப்பிட்ட பிரிவின் சமூக அந்தஸ்தை எப்படி மாற்றும், கள யதார்த்தம் வேற இருக்கும் போது ஒரு சிலை எவ்வளவு முக்கியமானது என்பது குறித்த பல்வேறு விமர்சனங்கள் இங்கே இருக்கின்றன. இது எல்லா சிலைகளுக்கும் பொருந்தும் என்றாலும் அரசியல்வாதிகள் அதைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்" என்ற தெலக்கப்பள்ளி ரவியின் கூற்று இங்கே கவனிக்கத்தக்கது.