Published : 06 Sep 2017 08:52 AM
Last Updated : 06 Sep 2017 08:52 AM

லாலு பிரசாத் மகளின் பண்ணை வீடு முடக்கம்: அமலாக்கப் பிரிவு நடவடிக்கை

லாலு பிரசாத் யாதவின் மகளுக்கு சொந்தமான டெல்லியில் உள்ள பண்ணை வீட்டை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஐ.ஆர்.டி.சி. ஹோட்டல் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகவும் இதன் மூலம் கிடைத்த பணத்தை தனது குடும்பத்தினர் பெயருக்கு அவர் மாற்றியதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக மத்திய அமலாக்கப் பிரிவினர் கடந்த ஜூலை மாதம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதிக்கு தெற்கு டெல்லியில் பிஜ்வசன் பகுதியில் சொந்தமாக ஒரு பண்ணை வீடு இருப்பது தெரியவந்தது. 2008-09-ம் ஆண்டில் இந்த பண்ணை வீடு ரூ.1.2 கோடிக்கு மிஷெய்ல் பேக்கர்ஸ் அண்ட் பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் சட்ட விரோதமான முறையில் பணம் கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மிசா பாரதியும் அவரது கணவர் ஷைலேஷ் குமாரும் என்பது தெரியவந்தது. சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அதற்கு உதவியதாகவும் சுரேந்திர குமார் ஜெயின், வீரேந்திர ஜெயின் சகோதரர்கள் மற்றும் ஆடிட்டர் ராஜேஷ் அகர்வால் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள லாலுவின் மகள் மிசா பாரதியின் பண்ணை வீட்டை சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு நேற்று முடக்கி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x