Published : 19 Sep 2017 12:52 PM
Last Updated : 19 Sep 2017 12:52 PM

தாவூத் இப்ராஹிமின் சகோதரர் கைது

தானேமும்பையில் கட்டுமான தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் இப்ராஹிம் காஸ்கரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் தலைமறைவாக உள்ளார். இவரது தம்பியான இக்பால் இப்ராஹிம் காஸ்கர், தானேவைச் சேர்ந்த கட்டுமானத் தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் பணம் மற்றும் 4 பிளாட்கள் கொடுக்க வேண்டும் என்று தாவூத் பெயரைக் கூறி மிரட்டி உள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் தானே போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு தெற்கு மும்பையில் தனது சகோதரி ஹசீனா பார்க்கரின் வீட்டில் இருந்த இக்பால் இப்ராஹிம் காஸ்கரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் காஸ்கர் கைது செய்யப்பட்டதாக தானே போலீஸ் கமிஷனர் பரம்பிர் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து பரம்பிர் சிங் மேலும் கூறியதாவது:

போலீஸார் சென்றபோது தொலைக்காட்சியில் ‘கவுன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியை பிரியாணி சாப்பிட்டபடி காஸ்கர் பார்த்துக் கொண்டிருந்தார். தானே, மும்பை, நவி மும்பை ஆகிய இடங்களில் கட்டுமான தொழில் அதிபர்கள் பலரை இக்பால் காஸ்கர் பணம் கேட்டு மிரட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கூலிப்படையினரை வைத்து தொழிலதிபர்களை காஸ்கர் மிரட்டி உள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் உள்ளூர் அரசியல்வாதிகள், கார்ப்பரேட் தொழில் அதிபர்கள் பெயர்களும் வெளிவந்துள்ளன. பணம் பறித்தலில் அரசியல்வாதிகளின் பங்கு பற்றியும் இவற்றில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்படும். போதைப் பொருள் கடத்தல் கோணத்திலும் வழக்கை விசாரிப்போம்.

இக்பால் காஸ்கரின் கூட்டாளிகளான மும்தாஜ் ஷேக், இஸ்ரார் அலி ஜமீல் சையத் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், காஸ்கரின் சகோதரி ஹசீனா பார்க்கரின் நெருங்கிய உறவினர் இக்பால் பார்க்கர், போதைப் பொருள் வியாபாரியான முகமது யாசின் குவாஜா ஹூசைன் ஆகியோரையும் இந்த வழக்கு தொடர்பாக பிடித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு பரம்பிர் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x