ஜாலியன்வாலாபாக் நினைவுநாளில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மரியாதை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவுநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நேற்று மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட ரவுலட் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்தின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் நேற்று மரியாதை செலுத்தினர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக பணிவான மரியாதையை செலுத்துகிறேன். இந்த சம்பவம் நடந்த புனிதமான இடத்துக்கு செல்வதற்கான வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. அப்போது உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினேன்” என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜாலியன்வாலா பாக் பகுதியில் இதே நாளில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவுகூர்கிறேன். வலிமையான இந்தியாவை கட்டமைக்க வேண்டும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவர்களின் தியாகம் நமக்கு நினைவுபடுத்துகிறது” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in