Published : 13 Apr 2023 05:31 PM
Last Updated : 13 Apr 2023 05:31 PM

உ.பி என்கவுன்ட்டர்: காவல் துறைக்கு முதல்வர் யோகி பாராட்டு - ‘போலி’ என அகிலேஷ் கண்டனம்

உ.பி என்கவுன்ட்டர் சம்பவம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடி அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், காவல் துறைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேவேளையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ‘இது ஒரு போலி என்கவுன்ட்டர்’ என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "போலி என்கவுன்ட்டர்கள் மூலம் பாஜக அரசு மக்களின் கவனத்தை மாநிலத்தில் நிலவும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பப் பார்க்கிறது. பாஜகவுக்கு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையில்லை. இன்றைய என்கவுன்ட்டராக இருக்கட்டும், இதற்கு முன்னர் சமீபத்தில் நடந்த என்கவுன்ட்டர்களாக இருக்கட்டும், அனைத்துமே தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் எது சரி, எது தவறு என்பதை முடிவு செய்யக் கூடாது. பாஜக நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

ஆசாத் அகமது என்கவுன்ட்டர் செய்தி வந்தவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில காவல் துறையைப் பாராட்டியுள்ளார். டிஜிபி மற்றும் சட்டம் - ஒழுங்கு சிறப்பு இயக்குநர் ஆகியோருக்கும், என் கவுன்ட்டரில் ஈடுபட்ட அதிரடிப் படை குழுவுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், "ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மற்ற கிரிமினல்களுக்கு ஓர் அழுத்தமான செய்தி கடத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அதிரடிப்படை போலீஸாருக்கு வாழ்த்துகள். இது புதிய இந்தியா என்ற செய்தி கிரிமினல்களுக்கு சென்றிருக்கும்" என்றார்.

யார் இந்த ஆசாத் அகமது? கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது, அவரது தம்பி காலித் அசீம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கொல்லப்பட்டார். இவ்வழக்கில் பிரபல ரவுடி அத்திக் அகமது, அவரது மகன் ஆசாத் அகமது, கூட்டாளி குலாம் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அத்திக் அகமது ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் ஆசாத் அகமது, குலாம் ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். அவர்கள் பற்றி துப்பு கொடுப்போருக்கு போலீஸ் ரூ.5 லட்சம் பரிசு அறிவித்திருந்தது. இந்நிலையில், உ.பி.யில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு தப்பிக்க முயன்ற ஆசாது அகமதுவும், குலாமும் போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டனர். போலீஸார் மீது குலாப் துப்பாக்கிச் சூடு நடத்த பதில் தாக்குதலில் ஆசாத் அகமதும், குலாமும் கொல்லப்பட்டனர். | விரிவாக வாசிக்க > உ.பி.யில் என்கவுன்ட்டர் - பிரபல ரவுடி அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் சுட்டுக் கொலை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x