Published : 13 Apr 2023 04:04 PM
Last Updated : 13 Apr 2023 04:04 PM

உ.பி.யில் என்கவுன்ட்டர் - பிரபல ரவுடி அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் சுட்டுக் கொலை

இடது: ஆசாத் அகமது | வலது: என்கவுன்ட்டருக்குப் பின்.

ஜான்சி: வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் பிரபல ரவுடி அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது இன்று மதியம் உத்தரப் பிரதேச அதிரடிப்படை போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் இந்த என்கவுன்ட்டர் நடந்தது. இந்தத் தகவலையறிந்த அத்திக் அகமது நீதிமன்றத்தில் கதறி அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்கவுன்ட்டர்; போலீஸ் விளக்கம்: இந்த என்கவுன்ட்டர் குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில், "வழக்கறிஞர் உமேஷ் பால் கொலைக்குப் பின்னர் லக்னோ, கான்பூர், மீரட், டெல்லி என இடம்பெயர்ந்து கொண்டே இருந்தார் ஆசாத் அகமது. அத்திக் அகமது கும்பலில் இருந்த இன்ஃபார்மர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆசாத் மத்தியப் பிரதேசம் செல்லத் திட்டமிட்டது தெரியவந்தது. எங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் கைது நடவடிக்கையை திட்டமிட்டோம்.

இதற்காக இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் 12 போலீஸார் ஆசாத் அகமது மற்றும் குலாமை கைது செய்ய விரைந்தனர். ஜான்சி அருகே ஆசாத் அகமதுவையும், குலாமையும் அதிரடிப் படை சுற்றிவளைத்தது அப்போது குலாம் அதிரடிப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனையடுத்து நடந்த பதில் தாக்குதலில் ஆசாத் அகமதுவும், குலாமும் கொல்லப்பட்டனர். மொத்தம் 42 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொலையான இருவரிடமும் இருந்து செல்ஃபோன், சிம் கார்டுகள், வால்டர் P 88 ரக பிஸ்டல்கள் இன்னும் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதறி அழுத அத்திக் அகமது: இதற்கிடையில் அத்திக் அகமதுவை போலீஸார் சபர்மதி சிறையிலிருந்து சாலை மார்க்கமாக அழைத்துவந்தனர். அதேபோல் அவரது சகோதரர் காலீத் ஆசிம் என்ற அஷ்ரஃபை பெரேலி சிறையிலிருந்து அழைத்து வந்தனர். இருவரையும் இன்று பிரயாக்ராஜ் சிறையில் ஆஜர்படுத்தினர். ஆசாத் அகமது கொலையான தகவல் அத்திக் அகமது நீதிமன்றத்தில் இருக்கும்போது தெரிவிக்கப்பட்டது. இதனையறிந்த அத்திக் அகமது கதறி அழுதார். முன்னதாக நீதிமன்ற வளாகத்திற்கு அத்திக் அகமது அழைத்து வரப்படும்போது அவர் மீது பார்வையாளர்களில் ஒருவர் பாட்டிலை வீசி எறிந்தார். ஆனால் அது அவர் மீது படவில்லை.

வழக்கின் பின்னணி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் அத்திக் அகமது (60). இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உட்பட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது குடும்பத்தினர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உ.பி. முழுவதும் கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் அத்திக் அகமது ஈடுபட்டு வந்தார். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரை அவர் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. பதிவுத் துறை ஆவணங்களின் அடிப்படையில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் ரூ.11,684 கோடிக்கு சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் அனைத்தையும் உ.பி. அரசு முடக்கியுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது, அவரது தம்பி காலித் அசீம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கொல்லப்பட்டார். இவ்வழக்கிலும் அத்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அத்திக்கின் மகன் ஆசாத் மற்றும் குலாம் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களைப் பற்றி துப்பு சொல்பவர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஜான்சி பகுதியில் ஆசாத்தையும், குலாமையும் போலீஸார் சுற்றிவளைத்து என்கவுன்ட்டர் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x