உ.பி. தொழிற்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக ஷண்முக சுந்தரம் ஐஏஎஸ் நியமனம்

உ.பி. தொழிற்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக ஷண்முக சுந்தரம் ஐஏஎஸ் நியமனம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய வர்த்தகத் துறையின் அயல்பணி முடித்து உத்தரப் பிரதேசம் திரும்பியுள்ளார் டாக்டர்.எம்.கே.ஷண்முக சுந்தரம். தமிழரான இவர் உத்தரப் பிரதேசத்தின் தொழிற்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் அயல்பணியாக அதிகாரி ஷண்முக சுந்தரம், மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தில் இருந்தார். இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை பொருளாதார மண்டலத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி வர்த்தக மையத்தின் வளர்ச்சி ஆணையராகப் பணியாற்றி வந்தார். இங்கு தன் அயல்பணிக் காலம் முடிவடைந்ததால் அதிகாரி ஷண்முக சுந்தரம் தனக்கு ஐஏஎஸ் பணியில் ஒதுக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்துக்கு திரும்பியுள்ளார். பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் தமிழரான ஷண்முக சுந்தரத்தை, முதல்வர் ஆதித்யநாத் தன் தொழில்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமித்துள்ளார்.

ஷண்முக சுந்தரம் கோயம்புத்தூரின் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தவர். டெல்லியின் பூசா வளாகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இதன் பிறகு குடிமைப் பணித் தேர்வு எழுதி ஐஏஎஸ் பெற்று, உத்தரப் பிரதேசத்தில் பணியாற்றி வந்தவர். அம்மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களான காஜியாபாத், கவுதம்புத்நகர் (நொய்டா) உள்ளிட்ட பலவற்றின் ஆட்சியராகவும் பணியாற்றிவர். மிகவும் திறமையான அதிகாரியாகக் கருதப்படும் இவர், சமீபத்தில் தன் உத்தரப் பிரதேச பணியில் மீண்டும் சேர, தலைநகரான லக்னோவிற்கு வந்தார்.

இவரை, அங்கு பணியாற்றும் தமிழரும் ஆயத்தீர்வைத் துறையின் ஆணையருமான சி.செந்தில்பாண்டியன் ஐஏஎஸ் பூங்கொத்து அளித்து வரவேற்றார். அப்போது அவருடன் வேறு சில தமிழர்களான உத்தரப் பிரதேசத்தின் குடிமைப்பணி அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in