ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா மகன் போட்டி

ஷிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா மகன் போட்டி
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கான‌ சட்டப்பேரவைத் தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 166 வேட்பாளர்களின் பெயரும், மஜத சார்பில் போட்டியிடும் 93 வேட்பாளர்களின் பெயரும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு, பாஜக சார்பில் போட்டியிடும் 189 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் நேற்று முன் தினம் இரவு அறிவிக்கப்பட்டது. அதில், கர்நாடக அமைச்சர் வி.சோமன்னா 2 தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த முறை வென்ற சாம்ராஜ்நகர் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா போட்டியிடும் வருணா தொகுதியில் அவருக்கு எதிராகவும் நிறுத்தப்பட்டுள்ளார்.

இதேபோல மற்றொரு அமைச்சர் ஆர்.அசோக்கும் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் கடந்த முறை வென்ற பத்மநாபநகர் தொகுதியுடன், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு எதிராக போட்டியிடுகிறார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவன் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா 7 முறை வெற்றிபெற்ற ஷிகாரிபுரா தொகுதி, அவரது மகன் விஜயேந்திராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய செயலாளரும், தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி. ரவி சிக்கமக‌ளூரு தொகுதியில் போட்டியிடுகிறார்.

அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெல்லாரி புறநகர் தொகுதியிலும், பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ர‌மேஷ் ஜார்கிஹோளி கோகாக் தொகுதியிலும், அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் முதோல் தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மஜத முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு எதிராக சி.பி.யோகேஷ்வர் நிறுத்தப்பட்டுள்ளார்.

பெங்களூரு மாநகர முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் உள்ளிட்ட 52 புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் 6 முறை வென்ற அமைச்சர் அங்காரா, உடுப்பி எம்எல்ஏ ரகுபதி பட் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள், பாஜக மேலிடத்துக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.பாஜக வேட்பாளர் பட்டியலில் 8 பெண்கள் இடம்பெற்றுள்ளன‌ர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in