

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ல் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர் இதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய விமானப் படை 2019 பிப்ரவரி 26-ல் பாகிஸ்தானின் எல்லையை தாண்டி பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் பயிற்சி முகாம்கள் மீது அதிரடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் காஷ்மீர் வந்த இந்திய விமானப் படைக்கு சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் மீது நமது ஏவுகணை வீசி தாக்கி அழிக்கப்பட்டது. அப்போது நகர் விமானப் படை நிலையத்தில் குரூப் கேப்டன் சுமன் ராய் சவுத்ரி உத்தவின்பேரில்தான் மிக் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதில், இரண்டு விமானிகள் உள்பட ஆறு விமானப் படை வீரர்கள் மற்றும் குடிமகன் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ராணுவ நீதிமன்றம், தவறான உத்தரவால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறி குரூப் கேப்டனை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. அப்போதைய மூத்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியான விங் கமாண்டர் ஷியாம் நைதானிக்கு கடும் கண்டனத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது.
அப்போதைய ஐஏஎப் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதௌரியா கூறுகையில் “இது எங்கள் தவறு. எம்ஐ-17ஐ தாக்கியது நமது ஏவுகணைதான். இரண்டு அதிகாரிகள் ஒழுங்காற்று நடவடிக்கையை (கோர்ட் மார்ஷியல்) எதிர்கொள்வார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து குரூப் கேப்டன் மேல்முறையீடு செய்ததையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது. மேலும், ராணுவ சட்டத்தின்படி, இந்த தீர்ப்பை இந்திய விமானப் படை தலைவர் அங்கீகரிக்க வேண்டும். எனினும், உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் இந்த விவகாரத்தில் அவர் இறுதி முடிவை எடுப்பார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.