

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதியில் தொழுகைக்கு முன்பு கை, கால்களை கழுவும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக தகவல் வெளியானது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மசூதியின் ஒசுகானா பகுதி சீல் வைக்கப்பட்டிருக்கிறது. எனினும் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாரணாசி சிவில் நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ரம்ஜான் மாதத்தில் கியான்வாபி மசூதிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒசுகானா பகுதி சீல் வைக்கப்பட்டிருப்பதால் தொழுகைக்கு வருவோர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே மாற்று வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, வரும் 14-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். கியான்வாபியின் ஒசுகானாவுக்கு நிரந்தரமாக சீல் வைக்கக் கோரி இந்துக்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு வரும் 21-ம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.