ராஜஸ்தானில் சச்சின் பைலட் மீண்டும் போர்க் கொடி - சமாதானம் செய்ய தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு

சச்சின் பைலட்
சச்சின் பைலட்
Updated on
2 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 2018-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. அதற்கு பக்கபலமாக இருந்தது சச்சின் பைலட் என்பதால் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சியில் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவியும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் வழங்கப்பட்டது. இதனால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இதனிடையே கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இருந்து விலகுவதாக சச்சின் பைலட் பூகம்பத்தை கிளப்பினார். இதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பைலட்டை சமாதானம் செய்தனர்.

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது கெலாட்டின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. கெலாட் பதவி விலகினால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால் தனது ஆதரவாளர்தான் முதல்வர் பதவியில் அமரவேண்டும் என்று கெலாட் உறுதியாக இருந்தார். இந்நிலையில் கார்கே, தேசியத் தலைவர் பதவியில் அமர சச்சின் பைலட்டுக்கு மீண்டும் வாய்ப்பு பறிபோனது.

இதைத் தொடர்ந்து சில காலம் அமைதியாக இருந்த நிலையில் அடுத்த பூகம்பத்தை கிளப்பியுள்ளார் சச்சின் பைலட்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பைலட் நேற்று கூறும்போது, “வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான முந்தைய பாஜக அரசின் ஊழல் தொடர்பாக கெலாட் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தோம். தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள்தான் உள்ளன.

ஏதோ சதி இருப்பதாக எதிரிகள் மாயையை பரப்பக்கூடும். எனவே இதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லை என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வார்கள். எனது கோரிக்கையை வலியுறுத்தி, நான் ஜெய்ப்பூரில் ஷாகீத் ஸ்மாரக்கில் 11-ம் தேதி (இன்று) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறேன்’’ என்றார். இந்த விவகாரம், அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

மாநில சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளநிலையில், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சச்சின் பைலட் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சச்சின் பைலட்டை சமாதானம் செய்யுமாறு கட்சியின் மூத்த தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் அரசு செய்துள்ளது. அந்த சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றைக் கூறி இந்த ஆண்டின் பிற்பகுதியில் மக்களின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு கட்சி மேலிடம் ஆதரவை வழங்கியுள்ள நிலையில் அதிருப்தி அடைந்துள்ள சச்சின் பைலட்டை சமாதானம் செய்யவும் மூத்த காங்கிரஸ் தலைவர்களை ராஜஸ்தானுக்கு கட்சி மேலிடம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தவா கூறும்போது, “உண்ணாவிரதப் போராட்டம் குறித்து சச்சின் பைலட் இதற்கு முன்பு பேசவில்லை. இந்த விவரம் தொடர்பாக என்னிடம் அவர் பேசியிருக்க வேண்டும். அப்படி நான் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால், அவர் தனது குறையை வெளியே சொல்லியிருக்கலாம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in