

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங். இவர் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்' என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 18-ம் தேதி முதல் அம்ரித்பால் சிங் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில் நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை என்றும், விரைவில் போலீஸாரிடம் சரண் அடைவேன் என்றும் தெரிவித்து அம்ரித்பால் சிங் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் அம்ரித் பாலின் நெருங்கிய கூட்டாளி பப்பல் பிரீத் சிங் பஞ்சாபில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஹோஷியார்பூர் பகுதியில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் உதவியுடன், பஞ்சாப் உளவுப் பிரிவு போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.