

நாசிக்: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்றது முதல், அவர் எந்த பல்கலைக்கழகத்தில் படித்தார், என்ன பட்டம் பெற்றார் என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் அவ்வப்போது கேட்டு வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். இதன்படி, ‘பிரதமர் மோடியின் கல்வித் தகுதிபற்றிய தகவல்களை அளிக்குமாறு பிரதமர் அலுவலகம், குஜராத் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையர் எம்.ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், தகவல் ஆணையரின் உத்தரவை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் குஜராத் பல்கலைக் கழகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தகவல் ஆணையம் வெளியிட்ட உத்தரவு மற்றும் கேஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத்பவார் பங்கேற்றார். அப்போது அவர் பிரதமர் மோடி கல்வித் தகுதி குறித்து கூறியதாவது:
பிரதமர் மோடி எங்கு படித்தார்,என்ன பட்டம் பெற்றார் என்பதுதான் இப்போது நாட்டின் முக்கிய பிரச்சினையா? பிரதமர் கல்வித் தகுதி என்ன என்பதுதான் நாட்டின்முன் உள்ள மிகப்பெரிய கேள்வியா? இது அரசியல் பிரச்சினையா? உண்மையில் மிகப் பெரிய பிரச்சினைகளாக இருப்பது பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, சட்டம் ஒழுங்கு இவைதான். இந்த விஷயங்களில்தான் மத்திய அரசை கேள்வி கேட்க வேண்டும்.
தற்போது மத ரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் பருவம் தவறியமழையால் பயிர்கள் நாசம் அடைந்துள்ளது. இந்தப் பிரச்சினைகளைப் பற்றிதான் நாம் விவாதிக்க வேண்டும். இவ்வாறு சரத் பவார் கூறினார்.
காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள சரத் பவார், எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு மாற்றாக தனது கருத்தை வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டர்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்துநாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், இதுகுறித்து சரத் பவார் கூறும்பாது, ‘‘ஹிண்டன்பர்க் அறிக்கையைப் பொறுத்த வரையில், அதானி குழுமம் குறி வைத்து தாக்கப்படுவதாக கருதுகிறேன். நாட்டின் வளர்ச் சிக்கு கார்ப்பரேட்டுகளும் முக்கியம்’’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இது எதிர்க்கட்சித் தலைவர் களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரண்டாவது முறையாக தற்போது பிரதமர் மோடியின் கல்வித் தகுதி விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு எதிராக சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.