

பந்திப்பூர்: புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, நாடு முழுவதும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கர்நாடக மாநிலம் பந்திப்பூர் மற்றும் தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகங்களை பார்வையிட்டார்.
தமிழகத்தின் முதுமலை பகுதிகளுக்கு வருவதற்கு முன், பந்திப்பூர் வனப்பகுதியை பார்வையிட்டார். பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதி சாமராஜநகர் மாவட்டத்தின் குண்ட்லுப்பேட்டை தாலுகாவிலும், ஒரு பகுதி மைசூரு மாவட்டத்தின் எச்.டி.கோட் மற்றும் நஞ்சன்கூடு தாலுகாவிலும் அமைந்துள்ளது.
பந்திப்பூரில் வனவிலங்கு சஃபாரி மேற்கொள்ளும் வகையில், காலை 7 மணி அளவில் வனத்துறை வழங்கிய மாக்கி சட்டை, கறுப்பு தொப்பி மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்த பிரதமர் மோடியின் புகைப்படம் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டது. தொடர்ந்து, கம்மனஹள்ளியில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பக நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக ஹெலிபேட்டில் வந்து ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக வனப்பகுதிக்குள் உள்ள வரவேற்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வரவேற்பு மையத்தில் உள்ள தியாகிகள் நினைவிடம் நோக்கி நடந்து சென்று பணியின் போது உயிரிழந்த வனத்துறை ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், 10 நிமிடங்கள் அங்கு ஓய்வெடுத்ததுடன், ஒரு தேநீரும் பருகினார்.
பின்னர் 10 இருக்கைகள் கொண்ட திறந்த ஜீப்பில் வனவிலங்கு சஃபாரியை மேற்கொண்டார். பிரதமர் சென்ற வாகனத்தில் பிரதமருடன் ஓட்டுநர், பாதுகாப்பு அதிகாரிகள் என மேலும் மூவர் இருந்தனர். அதேநேரம், மற்ற பாதுகாப்பு அதிகாரிகள், வனத்துறையினர் சுமார் 7 வாகனங்களில் பிரதமரின் ஜீப்பை பின்தொடர்ந்தனர்.
அதிகாரிகள் சகிதமாக பிரதமர் மோடி சென்ற சஃபாரி பாதையில் புலிகள், சிறுத்தைகள் தென்படவில்லை. சுமார் 2 மணிநேரம் 22 கி .மீ தூரம் பயணித்தும் பிரதமரால் புலி மற்றும் சிறுத்தைகளை பார்க்கமுடியவில்லை. சஃபாரிக்கான பாதை சிறப்புப் பாதுகாப்புக் குழுவால் (SPG) முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
கோடை காலத்தில் வன விலங்குகள் நீர்நிலைகளில் அடிக்கடி வருவதைக் கருத்தில் கொண்டு இந்த பாதை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், புலிகள் எதுவும் தென்படவில்லை. பிரதமர் புலியை பார்க்க வேண்டும் என்ற முயற்சியில் மாற்று பாதையில் சஃபாரி செய்ய வனத்துறையினர் பரிந்துரைத்தனர். ஆனால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த பாதையை தாண்டி மாற்றுப்பாதையில் செல்வதை SPG குழு அனுமதிக்கவில்லை.
புலிகளை பார்க்க முடியாவிட்டாலும், யானைகள், காளைகள், மான்கள், உடும்பு போன்றவற்றை நன்றாகப் பார்த்து புகைப்படம் எடுத்தார் பிரதமர். வனவிலங்குகளை பார்த்த மகிழ்ச்சியை அதிகாரிகள் மத்தியில் வெளிபடுத்திய பிரதமர் மோடி, SPGயின் பாதுகாப்பு ஒத்திகை ஒருவேளை புலிகள் மற்றும் சிறுத்தைகளை தொந்தரவு செய்திருக்கலாம் என்று கிண்டல் அடித்ததாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலிகளைப் பார்ப்பது தற்செயலான விஷயம், இது நேரம் மற்றும் பருவத்தைப் பொறுத்தது. கோடை காலம் என்பதால், காலை 6 மணி முதல் 8 மணி வரை அல்லது மாலை நேரங்களில் புலியை பார்க்க முடியும். ஆனால், பிரதமர் மோடியின் சஃபாரி காலை 7.45 மணிக்குதான் தொடங்கியது. இதனாலேயே சுமார் 2 மணி நேரம் நீடித்த சஃபாரியில் புலியை பார்க்க முடியவில்லை என்று அதிகாரிகள் விளக்கினர். முன்னதாக, பிரதமரின் வருகையை முன்னிட்டு ஏப்ரல் 6 முதல் பந்திப்பூரில் பொதுமக்களுக்கான வனவிலங்கு சஃபாரி சேவை நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சஃபாரி முடிந்து மீண்டும் திரும்பும் வழியில் வரவேற்பு மையத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள போல்குடா காட்சி முனையில், பிரதமர் சில புகைப்படங்கள் எடுத்தும், தொலைநோக்கி மூலம் மலைகளின் காட்சியையும் பார்த்து ரசித்தார். திரும்பும் வழியில் மரலஹள்ளி வேட்டை தடுப்பு முகாம் வன ஊழியர்களுடன் கலந்துரையாடிய அவர், கெக்கனஹல்லா சோதனைச் சாவடியில் 30 வயது யானையின் உயிரைக் காப்பாற்றிய குண்ட்லுப்பேட்டை ஏசிஎஃப் ரவீந்திரன், எஸ்டிபிஎஃப் ஊழியர்கள், ஓம்கார் வனச் சரகத்தின் அதிகாரிகளை பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பந்திப்பூர் விசிட்டுக்கு பின் முதுமலை பார்வையிட்டிருந்தார் பிரதமர் மோடி.