

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகளின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்: திரிணமூமுல் காங்கிரஸ் கட்சி (AITC), தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய 3 கட்சிகளின் தேசிய அங்கீகாரம் திரும்பப் பெறப்படுகிறது. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், 21 சட்டப்பேரவைத் தேர்தல்கள் என இந்தக் கட்சிகள் தங்களது தேசிய அங்கீகாரத்தை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது. டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் அண்மையில் நடந்த குஜராத் தேர்தல் உட்பட 4 மாநிலங்களில் அக்கட்சிக்கு கிடைத்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத் தேர்தலுக்கு முன்பு டெல்லி மாநகராட்சி தேர்தலை சந்திக்க நேர்ந்தது. தனது கோட்டையான டெல்லியை தக்கவைக்க ஆம் ஆத்மி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் இடையிடையே சிறு தொய்வு ஏற்பட்டது. இந்த திடீர் சுமையும் கூட ஆம் ஆத்மிக்கு பின்னடைவு ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், குஜராத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆம் ஆத்மி கட்சியினர் இந்த வெற்றியைப் பொறுத்தவரை நல்லதொரு சமிக்ஞை. தேசிய அரசியலில் தாங்கள் தடத்தை விரிவுபடுத்த உதவியுள்ளது. பாஜகவை எதிர்க்கும் சக்தியுள்ள கட்சியாக ஆம் ஆத்மி இனி மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் பலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.