அமித் ஷாவின் அருணாச்சல் பயணத்திற்கு சீனா எதிர்ப்பு

அமித் ஷாவின் அருணாச்சல் பயணத்திற்கு சீனா எதிர்ப்பு
Updated on
1 min read

பீஜிங்: அருணாச்சலப் பிரதேசத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அது பீஜிங் பிராந்திய இறையாண்மைக்கு எதிரானது எனக் கூறி சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இன்று செய்தியாளர்களை சந்திக்கும்போது, "ஜாங்னன் (அருணாச்சலப் பிரதேசத்தை சீனா இந்தப் பெயரில் தான் குறிப்பிடுகிறது) சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கே இந்திய உள்துறை அமைச்சர் செல்வது பீஜிங் பிராந்திய இறையாண்மைக்கு எதிரானது. அவரது இந்தச் செயல் எல்லையில் அமைதிக்கு உகந்தது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்றும் (ஏப்.10), நாளையும் (ஏப்.11) இந்தியா சீனா எல்லையில் உள்ள கிபித்தூ என்ற கிராமத்தில் பயணம் மேற்கொள்கிறார். அங்கு கிராம நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைக்கிறார்.இந்நிலையில்தான் சீனா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஓர் அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிட்டுகிறது. இந்நிலையில், இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீன உள்துறை அமைச்சகம் மாற்றி உள்ளது. இதில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் சீனா மாற்றியுள்ளது. இந்த பெயர் மாற்ற அறிவிப்பை ஏப்ரல் 2-ஆம் தேதி சீன உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளுக்கு புதிய அதிகாரபூர்வமான பெயர்களை வெளியிட்டு, அவற்றின் மீது உரிமை கோரும் சீனாவின் முயற்சியை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "சீனா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது முதல்முறை அல்ல. இந்த முயற்சியை மழுமையாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கமாக; பிரிக்க முடியாத பகுதியாகவே இருந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பெயர்களை மாற்றுவதால் அதன் இந்த நிலை மாறிவிடாது" எனக் கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in