

பெங்களுரூ: “இந்த ஆண்டு இந்தியாவில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும். எல் நினோ வாய்ப்புகள் அதிகரிக்கும். இது ஆசியாவுக்கு வறண்ட வானிலையைக் கொண்டு வரலாம்” என்று தனியார் வானிலை முன்னறிவிப்பு மையமான ‘ஸ்கைமெட்’ திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து ‘ஸ்கைமெட்’ நிர்வாக இயக்குநரான ஜட்டின் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல் நினோ நிகழ்வு அதிகரித்து வருகிறது. பருவமழையின் போது, அது அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் நிகழ்வாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எல் நினோவின் வருகை பருவமழையை பாதிக்கலாம். இந்தியாவில் நீண்ட கால சராசரியாக பருவகால மழை 94 சதவீதம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லியில் வரும் ஜூன் மாதம் தொடங்கும் நான்கு மாத பருவமழை காலத்தில், அதன் 50 ஆண்டு கால சராசரியான 88 சென்டி மீட்டர் மழையில், இந்த முறை 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை அந்நகரம் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அரசின் வானிலை ஆராய்ச்சி நிலையமான இந்திய வானிலை ஆய்வு மையம் விரைவில் தனது வருடாந்திர வானிலை முன்னறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பாசன வசதி இல்லாத பாதிக்கும் அதிகமான விவசாய நிலங்களில் விளையும் நெல், சோளம், கரும்பு, பருத்தி, சோயாபீன்ஸ் போன்ற பயிர்களுக்காக விவசாயிகள் ஜூன் - செப்டம்பர் மாத மழையையே நம்பியிருக்கிறார்கள்.
இந்த முறை நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் மழைக் குறைவால் பாதிக்கப்படலாம். வட இந்தியாவின் விவசாய களஞ்சியம் என அழைக்கப்படும் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பருவமழை காலத்தின் இரண்டாவது பகுதியில் வழக்கத்தை விட குறைவான மழையே பெய்யக் கூடும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பருவம் தப்பி பெய்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை இந்தியாவின் வடக்கு, மத்திய, மேற்கு சமவெளிகளில் குளிர்காலத்தில் பயிரிடப்பட்ட கோதுமை போன்ற பயிர்களை சேதப்படுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளை நஷ்டமடையச் செய்துள்ளது. மேலும், உணவு விலையில் பணவீக்கத்தினை அதிகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.