

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் யோசனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் கடந்த ஆண்டு அந்த கட்சியில் இருந்து விலகினார். கடந்த 2022 ஜூலையில் மாநிலங்களவைக்கு சுயேச்சையாக போட்டியிட்ட அவர் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸின் குறைகளை தொடர்ச்சியாக சுட்டிக் காட்டும் அவர், மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த சூழலில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அப்போதைய ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக தோல்வியை தழுவியது. பிரதமர் வேட்பாளர் இல்லாமலேயே எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் இப்போதே கூட்டணியை உறுதி செய்வது அவசியம். காங்கிரஸ் தலைமையிலேயே எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும். அப்போதுதான் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக போரிட முடியும்.
அதானி விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறிய கருத்தை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை. கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியம். இவ்வாறு கபில் சிபல் தெரிவித்துள்ளார்.