

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே ஏற்கெனவே மோதல் போக்கு இருந்து வந்தது. இருவருமே கட்சிக்கு முக்கியம் என கூறி அவர்களை காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்தது.
இந்நிலையில் ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை (ஏப்.11) உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் நேற்று அறிவித்தார். இது சொந்த அரசுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் எதிரான போராட்டமாக கருதப்படுகிறது. இதுகுறித்து சச்சின் பைலட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசின் மீது நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தினோம். எனக்கு பழிவாங்கும் அரசியலில் நம்பிக்கை இல்லை. ஆனால், எதிர்க்கட்சியாக எங்களுக்கு சில பொறுப்பு இருந்தது. அதனால்தான் நாங்கள் ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தோம். முந்தைய பாஜக அரசுக்கு எதிராக நாங்கள் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுதினேன்.
ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நாங்கள் சொன்னதற்கும், செய்வதற்கும் இடையே இடைவெளி இல்லை என்பதை மக்களுக்கு காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் 2-ம் தேதி மீண்டும் கடிதம் எழுதினேன். மக்கள் காங்கிரஸை நம்பியதால்தான் 21 இடங்களில் இருந்து 100 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதனால் முந்தைய அரசின் ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் மேலிடத்தை குறிவைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. ஆனால், தனது சொந்த விசாரணை அமைப்புகளை ராஜஸ்தான் அரசு பயன்படுத்துவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.