Published : 21 Sep 2017 03:55 PM
Last Updated : 21 Sep 2017 03:55 PM

ஊழல் வழக்கில் ஒரிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி உட்பட 5 பேரைக் கைது செய்தது சிபிஐ

 

ஊழல் வழக்கு ஒன்றில் சிபிஐ வியாழனன்று கைது செய்த 5 நபர்களில் ஒரிசா மாநில உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஐ.எம்.குதூசி என்பவரும் அடங்குவார்.

மருத்துவக் கல்லூரி விவகாரம் ஒன்றில் உச்ச நீதிமன்றத்தில் தங்கள் செல்வாக்கு மூலம் பிரச்சினையை ‘தீர்த்து’ கொள்ளலாம் என்று நீதிபதி குதூசியும் பாவனா பாண்டே என்பவரும் உறுதி அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி.

இந்த வழக்கில் பி.பி.யாதவ், பலாஷ், இடைத்தரகராகக் கருதப்படும் விஸ்வநாத் அகர்வாலா, ‘ஹவாலா ஆபரேட்டர்’ ராம்தேவ் சரஸ்வத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நகர கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார்கள்.

மேலும் இடைத்தரகரிடமிருந்து ரூ.1 கோடி ரொக்கமும் மற்றும் தேடுதல் வேட்டையில் மேலும் ரூ.91 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

பிரசாத் கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த பிரசாத் மருத்து விஞ்ஞானக் கழகம் என்ற கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 46 கல்லூரிகளை அரசு தடை செய்திருந்தது. காரணம் மருத்துவக்கல்லூரிக்கான சட்டப்பூர்வ நிபந்தனைகளை இந்தக் கல்லூரிகள் பூர்த்தி செய்யவில்லை என்பதால் ஓரிரு ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்குத் தடை விதித்தது அரசு.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட யாதவ் மற்றும் பலாஷ் ஆகியோர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபது குதூசி மற்றும் பாவனா பாண்டே ஆகியோருடன் இணைந்து அறக்கட்டளைக்கு சாதகமாக பிரச்சினைத் தீர்த்து வைப்பதற்காக சதி செய்ததாக புகார் எழுந்தது.

மீரட்டைச் சேர்ந்த வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் சுதிர் கிரி என்பவர் மூலம் நீதிபதி குதூசி மற்றும் பாவனா பாண்டேயை அவர்கள் சந்தித்துள்ளனர் என்கிறது சிபிஐ முதல் தகவல் அறிக்கை.

மாணவர்கள் சேர்க்கைக்குத் தடை விதித்த உத்தரவை எப்படியாவது திரும்ப பெற வைக்க இவர்கள் பல்வேறு முறையற்ற முயற்சிகளில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவக் கல்லூரி கட்டிய உத்தரவாதத் தொகையான ரூ.2 கோடியை இந்திய மருத்துவக் கவுன்சில் ரொக்கமாக்கிக் கொள்ளவும் அரசு அனுமதி அளித்தது.

முதலில் பிரசாத் அறக்கட்டளை தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தைத்தான் நாடியது, ஆனால் நீதிபதி குதூசியின் அறிவுரையின் படி அலஹாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அலஹாபாத் உயர் நீதிமன்றம், கவுன்சிலிங் நடத்தும் கல்லூரிகள் பட்டியலிலிருந்து இந்தக் கல்லூரியின் பெயரை அடிக்க வேண்டாம் என்று இடைக்கால உத்தரவுபிறப்பித்து, இந்திய மருத்துவக்கவுன்சில் உத்தரவாதத் தொகையை ரொக்கமாக்கிக் கொள்ளவும் தடை விதித்தது. ஆனால் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கவில்லை.

இதனையடுத்து மருத்துவ கவுன்சில் ஆஃப் இந்தியா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு ஆகஸ்ட் 29-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. காரணம் உயர் நீதிமன்ற உத்தரவினால் எதிரணிக்கு எந்த ஒரு லாபமும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தது.

உடனடியாக அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இங்குதான் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குதூசி, பாவனா பாண்டே ஆகியோர் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று அறக்கட்டளைக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக விஷயங்களை உச்ச நீதிமன்றத்தில் விஷயத்தை சுமுகமாக முடிக்க விஸ்வநாத் அகர்வாலா என்ற நபரை நாடியுள்ளனர். இவருக்கு நீதித்துறையில் நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர் அரசு ஊழியர்கள் பலர் இதில் ஈடுபடுவதால் பெரிய ‘சலுகை’யைக் கோரியுள்ளார் என்று சிபிஐ கூறுகிறது, இந்நிலையில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x