பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி: சரத் யாதவ் கண்டனம்

பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி: சரத் யாதவ் கண்டனம்
Updated on
1 min read

பனாரஸ் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.

பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று ஆண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கினர். இதில் அந்த மாணவி மயங்கி விழுந்தார். மாணவி மீதான பாலியல் அத்துமீறலைக் கண்டித்து மாணவிகள் சிலர் கடந்த இரண்டு நாட்களாகவே பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மீது போலீஸார் நேற்று தடியடி நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், "பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இத்தகைய தடியடி சம்பவம் இதற்கு முன்னதாக நடந்ததே இல்லை. இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமையை அத்துமீறும் செயல். ஜனநாயகத்தில் இது ஏற்புடையதல்ல. ஆளும் அரசு இதற்காக மன்னிப்பு கோர வேண்டும். இப்பிரச்சினையை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்" என்றார்.

ஆனால், பல்கலைக்கழக தரப்பிலோ, "மாணவிகளின் போராட்டத்தில் அரசியல் பின்புலம் இருக்கிறது. பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இத்தகைய போராட்டம் நடத்தப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "போராட்டம் என்ற பெயரில் சில விஷமிகள் மாணவர்களுடன் கலந்துவிட்டு நாச வேலைகளில் ஈடுபட்டதாலேயே போலீஸார் தடியடி நடத்தினர்" எனக் கூறப்பட்டுள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அண்மைக்காலமாக பெண்களை ஈவ் டீஸிங் உள்ளிட்ட பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கும் சம்பவம் அதிகரித்துவிட்டது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் நிர்வாகத்தினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மாணவிகளின் புகார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in