ஆன்லைன் பந்தய விளையாட்டுக்கு மத்திய அரசு தடை

ஆன்லைன் பந்தய விளையாட்டுக்கு மத்திய அரசு தடை
Updated on
1 min read

புதுடெல்லி: ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த, தகவல் தொழில் நுட்ப சட்டம் 2021-ல் மத்திய அரசு முக்கிய திருத்தங்களை செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று முன்தினம் அரசாணையை வெளியிட்டது. இதன்படி ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் விளையாட்டு களுக்கு அங்கீகாரம் அளிக்க 3 சுயஒழுங்கு அமைப்புகள் (எஸ்ஆர்ஓ) உருவாக்கப்பட உள்ளன. இந்த எஸ்ஆர்ஓ குழுக்களில் தலா ஒரு கல்வியாளர், ஓர் உளவியல் நிபுணர், ஒரு குழந்தைகள் நல ஆர்வலர் ஆகியோர் இடம்பெறுவர். ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள், மத்திய அரசு நியமிக்கும் எஸ்ஆர்ஓ குழுக்களிடம் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதா, வேண்டாமா என்பதை இந்த குழுக்கள் முடிவு செய்யும். ஆன்லைன் விளையாட்டு களுக்கு சிறார் அடிமையாவதை தடுப்பது, உளவியல் ரீதியான பிரச்சினைகளைத் தடுப்பது, பண மோசடிகளை தடுப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு எஸ்ஆர்ஓ குழுக்கள் முடிவுகளை எடுக்கும். முதல்கட்டமாக 3 எஸ்ஆர்ஓ குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்பிறகு இந்த குழுக்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது: இளைஞர்கள் அதிக அளவில் ஸ்டார்ப் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம். இதன்படி இந்திய ஆன்லைன் விளையாட்டு துறையை பல கோடி வருவாய் ஈட்டும் துறையாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்லைன் பந்தய விளையாட்டு, அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டு, பண இழப்பு ஏற்
படுவது ஆகியவற்றில் இருந்து பயனாளர்களை காப்பாற்ற ஏதுவாக புதிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in