

ஹுப்பள்ளி: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹுப்பள்ளி நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பாஜக வேட்பாளர்களை, மாநில பாஜக தேர்தல் கமிட்டி தேர்வு செய்து வைத்துள்ளது. இந்த 3 பேரில் இருந்து ஒருவரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் ஏப்.8-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. இதற்காக டெல்லி செல்கிறேன். அங்கு நடக்கும் ஆலோசனைக்கு பிறகு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
ஒவ்வொரு தொகுதி, மாவட்டங்களில் இருந்தும் வேட்பாளர்கள் குறித்த கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அதை வைத்தே ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் இருந்து ஒருவரை கட்சியின் நாடாளுமன்ற குழு தேர்வு செய்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.