“பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள்” - பிரதமரின் சமூக நீதி கருத்துக்கு கபில் சிபல் பதில்

கபில் சிபல் | கோப்புப்படம்
கபில் சிபல் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள்; ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் சில விளக்கங்களுடன் கருத்து தெரிவித்துள்ளர். சமூக நீதிதான் பாஜவின் அடிப்படையான நம்பிக்கை என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கான பதிலாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை கபில் சிபல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக சமூக நீதிக்காக இயங்குகிறது. சமூக நீதியை கொள்கையிலும் எண்ணத்திலும் கடைபிடிக்கிறது - பிரதமர்.

உண்மைகள் 1) கடந்த 2012 - 2021 வரை உருவாக்கப்பட்ட செல்வ வளங்களில் 40 சதவீதம்,மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்திருக்கு மட்டுமே சென்றிருக்கிறது, 2) கடந்த 2022 ஆம் ஆண்டில் அதானியின் சொத்துக்கள் 46 சதவீதம் அதிகரித்துள்ளது, 3) நாட்டின் 64 சதவீத ஜிஎஸ்டி வருவாய் 50 சதவீதத்திற்கும் கீழ் உள்ளவர்களிடமிருந்தே பெறப்படுகிறது; 4 சதவீதம் மட்டுமே டாப் 10 சதவீதம் உள்ளவர்களிடமிருந்து பெறப்படுகிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

முன்னதாக,வியாழக்கிழமை பாஜகவின் 44 வது நிறுவன நாள் நடந்தது. அதில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,"சமூக நீதி என்பது பாஜகவின் நம்பிக்கை... அதைக் கொள்கையாகவும் நடைமுறையிலும் பாஜக கடைபிடிக்கிறது. நாட்டில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுவது சமூக நீதியின் வெளிப்பாடு. எந்தவித பாரட்சமுமின்றி 50 கோடி ஏழைகள் பயன்பெறும், ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவச் செலவு திட்டம் சமூக நீதிக்கான எடுத்துக்காட்டு. நமது காரியகர்த்தாக்களின் பக்தி, அர்ப்பணிப்பு, சக்தி, தேசநலனே பிரதானம் என்ற மந்திரம் பேன்றவை தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார். (பிரதமர் உரை முழுமையாகப் படிக்க: 'ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும்' - பாஜக நிறுவன தின விழாவில் பிரதமர் மோடி உறுதி

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக கபில் சிபல் ட்வீட் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in