Published : 07 Apr 2023 05:09 AM
Last Updated : 07 Apr 2023 05:09 AM

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி மகன் அனில் அந்தோணி பாஜகவில் இணைந்தார்

பாஜகவில் இணைந்த அனில் அந்தோணியை வரவேற்றார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பாஜகவில் நேற்று இணைந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன், அனில்அந்தோணி, கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகத்தைஇயக்கிவந்தார். குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு இவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதையடுத்து அவர் காங்கிரஸில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் நேற்று பாஜகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் அவரை பாஜக மூத்த தலைவர்கள் பியூஷ் கோயல் மற்றும் முரளிதரன், கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

அனில் அந்தோணி அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும், ஒரு குடும்பத்துக்காகத்தான் பணியாற்றுவதாக நம்புகின்றனர். ஆனால், நான் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றியதாக நம்புகிறேன். உலகளவில் இந்தியாவை முன்னணிக்கு கொண்டுவருவது பற்றிய தெளிவான தொலைநோக்கு பிரதமரிடம் உள்ளது’’ என்றார்.

அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‘‘அனில் அந்தோணி பன்முக திறமை கொண்டவர். அவரது பணிகள் என்னை மிகவும் கவர்ந்தன. ஒருங்கிணைந்த வளர்ச்சியில் அவரது எண்ணங்கள் எல்லாம் பிரதமர் மோடியின் எண்ணங்களை பிரதிபலிக்கின்றன. அவர் பாஜகவில் தொடர்ந்து முக்கிய பங்காற்றுவார் மற்றும் தென் இந்தியாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுவார்’’ என்றார்.

ஏ.கே.அந்தோணி காங்கிரஸின் விசுவாசமான மூத்த தலைவர். அவரது மகன் அனில் அந்தோணி, பாஜக.வில் சேர்ந்தது காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் பாஜகவின் செல்வாக்கை குறிப்பாக கிறிஸ்தவர்களின் ஆதரவை பெற்றுத் தருவார் என பாஜக எதிர்பார்க்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x