

திருவனந்தபுரம்: கடந்த 2-ம் தேதி கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இரவு 9.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் டி-1 பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் ஒரு குழந்தை,பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
தப்பியோடிய மர்ம நபர், மகா ராஷ்டிராவின் ரத்னகிரியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு கொண்டு வரப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து கேரள போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த நபர் ஷாரூக் ஷபி (30) ஆவார். இவர் டெல்லி ஷாகின் பாக் பகுதி எப்.சி பிளாக்கில் பெற்றோர், 2 தம்பிகள், பாட்டியுடன் வசித்து வருகிறார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பிறகு தந்தை பக்ரூதீன், நொய்டாவில் நடத்தி வரும் தச்சு பட்டறையில் பணியாற்றி வந்தார்.
ஷாரூக் ஷபிக்கு மது, புகை பழக்கம் இருந்தது. கடந்த ஆண்டு ஜூனில் அவர் மது, புகை பழக்கங்களை கைவிட்டு ஆன்மிக பாதைக்கு திரும்பியுள்ளார். சொந்தமாக யூ டியூப் சேனல் தொடங்கி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த மார்ச் 31-ம்தேதி முதல் அவரை காணவில்லை.
இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் டெல்லி போலீ ஸில் புகார் அளித்தனர். அவர் டெல்லியில் இருந்து எப்படி கேரளா வந்தார் என்பது தெரியவில்லை. தனி ஆளாக கேரள ரயிலில் அவர் தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்புகள் குறைவு.
திட்டமிட்டு 3 பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி, எக்ஸ்பிரஸ் ரயில் ஆற்றுப் பாலத்தை கடந்தபோது பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி ஷாரூக் ஷபி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்மூலம் எந்த பயணிகளும் தப்பிக்கக்கூடாது, மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்துள்ளது. இவ்வாறு கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தீ வைக்கப்பட்ட ரயிலில் பய ணம் செய்த ரசீக் கூறியதாவது: ரயில் கதவு அருகேயுள்ள இருக் கையில் நான் அமர்ந்திருந்தேன். எனக்கு அருகே ரஹ்மத், சகாரா மற்றும் அவரது குழந்தை இருந்தனர். திடீரென சிவப்பு டீ சர்ட் அணிந்திருந்த ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தீ பற்றி எரிந்ததால் பயணிகள் அலறியடித்து தப்பியோடினர்.
பெட்ரோல் ஊற்றிய நபரை பிடிக்க முயற்சி செய்தேன். ஆனால் எனது வலது காலில் தீக்காயம் ஏற்பட்டதால் என்னால் ஓட முடியவில்லை.
அருகில் இருந்த ரஹ்மத், சகாரா, குழந்தையையும் காணவில்லை. என்னுடைய தகவல்களின் அடிப்படையில்தான் போலீஸார், குற்றவாளியின் உருவப்படத்தை வரைந்து வெளியிட்டனர். முக்கியமான வழக்கு என்பதால் ஊடகங்களில் பேட்டியளிக்கக்கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். இவ்வாறு ரசீக் தெரிவித்தார்.