“எனது மகன் பாஜகவில் இணைந்தது வேதனையளிக்கிறது” - ஏ.கே.அந்தோணி

ஏ.கே.அந்தோணி | கோப்புப் படம்
ஏ.கே.அந்தோணி | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: தனது மகன் அனில் அந்தோணி பாஜகவில் இணைந்தது வேதனை அளிப்பதாக அவரது தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். தனது மகன் பாஜகவில் இணைந்ததை அடுத்து ஏ.கே. அந்தோணி கூறியதாவது: ''எனது மகன் அனில் அந்தோணி பாஜகவில் இணைந்தது வேதனை அளிக்கிறது. அவரது இந்த முடிவு மிகவும் தவறானது.

பாஜகவையோ அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பையோ நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். அவர்கள் நாட்டை பலவீனப்படுத்த முயல்கிறார்கள். நாட்டின் ஜனநாயக அடிப்படைகளை பலவீனப்படுத்துகிறார்கள். மக்களை மத ரீதியாக பிரித்தாள்வதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. இதை நான் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறேன். இறுதி மூச்சு உள்ளவரை தொடர்ந்து எதிர்ப்பேன்.

காங்கிரஸ் கட்சியும், நேரு - காந்தி குடும்பமுமே, இந்தியாவின் ஒற்றுமைக்கும் அதன் பன்முகத்தன்மைக்கும் முக்கிய காரணம். அவர்கள் நாட்டு மக்கள் அனைவரையும் அவர்களது சாதி, மதம், இனம், பிராந்தியம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு இந்தியர்களாகப் பார்ப்பவர்கள். நான் அரசியல் ஆர்வம் பெற்றதற்கும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததற்கும் இந்திரா காந்தியே காரணம்.

ஒரே ஒரு முறை மட்டுமே இந்திரா காந்தியோடு கொள்கை ரீதியாக நான் முரண்பட்டேன். அதன் பிறகு மீண்டும் கட்சிக்குள் இணைந்தேன். தொடர்ந்து அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். எனக்கு தற்போது 82 வயதாகிறது. இன்னும் எவ்வளவு காலம் நான் இருப்பேன் என எனக்குத் தெரியாது. ஆனால், காங்கிரஸ்காரனாகவே நான் இறப்பேன்'' என்று ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in