பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை
புதுடெல்லி: பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியது: ''பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, பந்தயத்துடன் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
அதோடு, இது தொடர்பாக பன்முக சுய கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஆன்லைன் விளையாட்டில் தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கியதாக இந்த சுயக் கட்டுப்பாட்டு அமைப்புகள் இருக்கும். இத்தகைய அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த அமைப்புகள், எத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளை அனுமதிக்கலாம், எவற்றை அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக முடிவு எடுக்கக் கூடியவையாக இருக்கும்.
ஆன்லைன் விளையாட்டைப் பொறுத்தவரை அவற்றுக்கு அனுமதி வழங்குவதில் எளிய நடைமுறை பின்பற்றப்படும். அவை பந்தயத்துடன் கூடியதா இல்லையா என்பதுதான் அது. பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டாக இருப்பின், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்பதை இந்த சுயக் கட்டுப்பாட்டு அமைப்புகள் கூறிவிடும்'' என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
