

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளின் செயல்திறன் மிகவும் குறைவாக பதிவாகி உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் செயல்திறன் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாவது: ''இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையின் செயல்திறன் 34 சதவீதமாக பதிவாகி உள்ளது. மாநிலங்களவையின் செயல்திறன் 24.40 சதவீதமாக பதிவாகி உள்ளது. இந்த கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவையில் 8 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இதில் மிக முக்கிய நடவடிக்கையாக 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் கடந்த பிப்ரவரி 13-ம் தேதியுடன் முடித்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்டம் கடந்த மாதம் 13-ம் தேதி மீண்டும் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முடிவடைந்ததை அடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டத்தில் இரு அவைகளிலும் தலா 10 அமர்வுகள் நடைபெற்றன. இரண்டாம் கட்டத்தில் தலா 15 அமர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 25 அமர்வுகள் நடைபெற்றன. மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது நடைபெற்ற விவாதத்தில் மக்களவையில் 145 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களும் பங்கேற்றனர்'' என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.