Published : 06 Apr 2023 06:32 PM
Last Updated : 06 Apr 2023 06:32 PM

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளிகளால் அலுவல்கள் பாதித்த பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில் திட்டமிட்டபடி ஏப்.6-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்திருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளைக் காட்டியும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்நது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இத்தகைய செயல் சபையின் கண்ணியத்தை குறைத்து விட்டதாகவும், அவர்கள் திட்டமிட்டு தொடர்ச்சியாக அவையின் நடவடிக்கைகளை சீர்குலைத்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற செயல்பாட்டிற்கு எதிரான இத்தகைய செயல்பாடுகள் நாடாளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் நல்லதில்லை என்று தெரிவித்தார்.

சபாநாயரின் பேச்சைப் புறக்கணித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தனது வழக்கமான உரையினை பேசி முடித்த சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இன்றைய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல பாஜக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இன்று கட்சியின் நிறுவன தினத்தையொட்டி பெரும்பாலான பாஜக உறுப்பினர்கள் காவித் துண்டு அணிந்து அவைக்கு வந்திருந்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலையில் மாநிலங்களவை கூடியது. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு அவை கூடியதும், அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர், நாடாளுமன்ற நடைமுறைகளை படம் பிடித்ததற்காக காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக்ராவ் பாட்டீலின் இடைநீக்கம், நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவின் பரிந்துரைப்படி பட்ஜெட் கூட்டத் தொடரைத் தாண்டியும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

முன்னதாக, திமுக எம்பி திருச்சி சிவா, காங்கிரஸ் எம்பி சக்திசிங் கோஹில் ஆகியோர், ராகுல் காந்தியின் பேச்சு பற்றி மாநிலங்களவையில் விவாதிப்பதற்கு ஆட்சேபனைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு எதிரான அவைத்தலைவர் தன்கரின் முடிவு குறித்து விளக்கமளிக்க முயன்றனர். ஆனால் தனது முடிவில் அவைத்தலைவர் உறுதியாக இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இடைநீக்க முடிவினை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட, வழக்கமான உரையுடன் நிறைவு செய்த அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

குறைவான அலுவல்களுடன் நிறைவடைந்தத பட்ஜெட் கூட்டத்தொடர்: நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன 31-ம் தேதி தொடங்கியது. பிப் 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்.10-ம் தேதி நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில் அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மக்களவையில் 84 சதவீதமும், மாநிலங்களவையில் 56 சதவீதமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டம் மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், இந்திய ஜனநாயகம் பற்றி லண்டனில் ராகுல் காந்தி பேசியது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, முழக்கங்கள் எழுப்பி வந்தனர். இதனால் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் ஒத்திவைப்பிலேயே சென்றது.

நாடாளுமன்றதின் இரு அவைகளிலும் எந்த முக்கியமான அலுவல்களும் நடைபெறவில்லை. பொதுவாக பட்ஜெட் குறித்த விவாதங்கள் இரண்டாவது கட்டத்தில் நடைபெறுவதே வழக்கம். ஆனால் எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி அமளிகள் காரணமாக நிதிநிலை அறிக்கை, சில மசோதாக்கள் விவாதங்களின்றி கூச்சல்களுக்கு இடையில் நிறைவேற்றப்பட்டன.

ராகுல் காந்தி தகுதி இழப்பு: காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், வயநாடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, 2019-ம் ஆண்டின் அவதூறு வழக்கு ஒன்றில் சூரத் நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன் கீழ் இந்தக் கூட்டத்தொடரின் இடையிலேயே தகுதி இழப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x