டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவி மீது பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவினை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா "மனு குறித்து சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்புங்கள், பதில் தாக்கல் செய்யட்டும்" என்று உத்தரவிட்டார்.

முன்னதாக, கடந்த மார்ச் 31-ம் தேதி விசாரணை நீதிமன்றம் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவினை நிராகரித்திருந்தது. மேலும், மணிஷ் சிசோடியா முதன்மையான குற்றவாளி என்றும், அவருக்கும் டெல்லி அரசாங்கத்திலுள்ள அவரது சகாக்களுக்கும் ரூ.90-100 கோடி முன்பணமாக கொடுத்ததாக கூறப்படும் குற்றத்தில், அவர் மிக முக்கியப் பங்கு வகித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

கடந்த 2021-22-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டு தற்போது கைவிடப்படிருக்கும் டெல்லி புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் நடத்திய பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் பிப்ரவரி 26-ம் தேதி அவரை கைது செய்தது. இது தொடர்பான வழக்கு ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் மறுப்பு: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு மே 20-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருக்கிறது. இந்த வழக்கின் இணை குற்றவாளிகளான வைபவ் ஜெயின் மற்றும் அன்குஷ் ஜெயின் ஆகியோருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

வழக்கினை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா, சத்யேந்திர சர்மா ஒரு செல்வாக்கு மிக்க நபர் என்றும், அவர் பிஎம்எல்ஏவின் கீழ் விதிக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்துவிட்டார் என்று கருத முடியாது என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணை நீதிமன்றம் சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்க மறுத்திருந்தது.

மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் இருவரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தனர். கைது நடவடிக்கைகளுக்கு பின்னர் தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in