

புதுடெல்லி: முகலாயர்கள் குறித்த பாடங்களை நீக்கவில்லை என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.
என்சிஇஆர்டியின் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து முகலாய மன்னர்களின் வரலாற்று பகுதி பாடம் நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், 11-ம் வகுப்பு பாடத்திட்டத்திலும் இஸ்லாமியர்களின் எழுச்சி மற்றும் கலாச்சார மோதல் தொடர்பான பகுதிகளை நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்தப் பாடத் திட்டங்களை நீக்கக்கூடாது எனபலர் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறும்போது, “மோடி அரசாங்கம் வரலாற்றுப் பாட நூல்களில் இருந்து முகலாய வரலாற்றை நீக்குகிறது. மேலும் இந்தியாவின் தற்போதைய வரலாற்றை சீனா அழித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
இந்நிலையில், முகலாயர்கள் குறித்த பாடத் திட்டங்களை நீக்கவில்லை என்று என்சிஇஆர்டி இயக்குனர் தினேஷ் பிரசாத்சக்லானி நேற்று செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக என்சிஇஆர்டி தயாரித்துள்ள வரலாற்று பாடப்புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் வரலாறு நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல. அது ஒரு பொய்.
கரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில்கடந்த ஆண்டு பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக ஒரு நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையில், மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பாடங்களை நீக்கக் கூடாது என்றும், சுமையாக உள்ள பகுதிகளை நீக்கலாம் என்றும் தெரிவித்தது.
தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டலின்படி நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கான பாடச் சுமையை குறைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. நாங்கள் அதனை அமல்படுத்துகிறோம்.
பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அது விரைவில் இறுதி செய்யப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி பாடப்புத்தகங்கள் 2024-ல் அச்சிடப்படும். தற்போதைக்கு நாங்கள் எதையும் கைவிடவில்லை. முகலாயர்களின் வரலாற்றை பாடப் புத்தகத்தில் இருந்து என்சிஇஆர்டி நீக்கிவிட்டதாக எழுந்துள்ள விவா தம் தேவையற்றது.
இது குறித்து தெரியாதவர்கள், பாடப் புத்தகத்தைப் பார்த்துக் கொள்ளலாம். முகலாயர் பாடத்திட்டங்களை நாங்கள் நீக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.