

புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக 14 அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
எதிர்க்கட்சியினரை பழிவாங்கு வதற்காக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகவும், எதிர்காலத்தில் இந்த நடவடிக்கையை தடுக்கவழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் எனவும் 14 அரசியல் கட்சிகள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘‘கைது நடவடிக்கைகளுக்கு வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் கூறியதாவது: குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் சட்டத்தைகைவிட முடியாது. உண்மைகள் இன்றி பொதுவான விதிமுறைகளை கைவிடுவது மிக அபாயமானது. சட்டத்தின் விதிமுறைகளை கைவிட எங்களுக்கு உண்மையான ஆதாரங்கள் தேவை.
அரசியல்வாதிகளும் சாதாரண மக்கள் தான். நீங்கள்அதிகளவிலான பாதுகாப்பையும், சிறப்பு சலுகையையும் பெறமுடியாது. சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகளால் எதிர்கட்சிக்களுக்கு பாதிப்பு என்று கூறுகிறீர்கள். இதற்கான பதில் நீதிமன்றங்களில் இல்லை. எனவே,இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து 14 அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெறப்பட்டது.