Published : 20 Sep 2017 06:46 PM
Last Updated : 20 Sep 2017 06:46 PM

மருத்துவக் காப்பீட்டுத் தோல்வி: 20 நாட்களேயான கைக்குழந்தை மரணமடைந்த துயரம்

மத்தியப் பிரதேசத்திலிருந்து பெங்களூரு மருத்துவமனைக்கு அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட 20 நாட்களே ஆன குழந்தை இருதய அறுவை சிகிச்சை மறுக்கப்பட்டதன் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது.

மத்தியப் பிரதேச மாநில அரசின் காப்பீட்டுத் திட்டத்துக்கும் பெங்களூரு மருத்துவமனைக்கும் இடையே இருந்த சிக்கல் காரணமாக குழந்தையின் குடும்பத்தினர் தாங்க முடியாத ஒரு தொகையை மருத்துவமனை குறிப்பிட்டது. குழந்தையின் தந்தை ஒரு பழ வியாபாரி. இதனால் சிகிச்சை செய்யப்படாமல் மத்தியப்பிரதேசத்துக்கு ரயிலில் மீண்டும் திரும்பிய போது பாதி வழியில் பிறந்து 20 நாட்களேயான கைக்குழந்தையின் உயிர் பிரிந்தது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்த்யா கார்யகிரம் திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேச தார் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி பெங்களூருவில் உள்ள நாராயணா ஹெல்த் மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனையின் பெருகும் பில்களைக் கொடுக்க முடியாமல் மருத்துவமனையிலிருந்து பழவியாபாரியான தந்தை மனோஜ் வர்மா டிஸ்சார்ஜ் செய்து ரயிலில் மத்தியப் பிரதேசம் திரும்பிக் கொண்டிருந்த போது குழந்தையின் உயிர் பிரிந்தது.

“குழந்தையுடன் வந்த அத்தை இந்தூர் வரும் வரை இறந்த குழந்தையை தன் கைகளில் சுமந்து வந்தார்” என்று குழந்தையின் மாமா தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநில அரசு இந்த மருத்துவமனைக்கு பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் சிகிச்சை அளித்ததன் விளைவாக தர வேண்டிய ரூ.6.3 கோடியை அளிக்கவில்லை என்பதால் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். பல்வேறு காப்பீட்டுத்திட்டங்களுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனை நாராயணா ஹெல்த் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அல்லாமல் ரூ.10,000 வாங்கிக் கொண்டு நாராயணா ஹெல்த் குழந்தையை அனுமதித்துள்ளனர். ஆனால் குடும்பத்தினரோ இலவச சிகிச்சை நம்பிக்கையில் அங்கிருந்து பெங்களூருக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். ஆனால் தனிப்பட்ட நோயாளியாக குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்படுவது தெரிந்து குடும்பத்தினர் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

இத்தனைக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அமைப்பு, கர்நாடகா மருத்துவ உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் ஆகியவை தலையிட்டன. மேலும் குடும்பத்தினர் தார் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.சி.பணிகா என்பவரிடம் சிகிச்சைக்கான தொகை அளிக்கப்படும் என்று உறுதியும் பெற்றிருந்தனர். ஆனாலும் மருத்துவமனை குழந்தை சிகிச்சைக்காக ரூ.83,400 தீட்டி பில்லை குடும்பத்தினரிடம் நீட்டியுள்ளது.

“பில்லை எங்களால் கொடுக்க முடியவில்லை. இன்னும் சில நாட்கள் இருந்தால் பில் தொகை உயரும் என்று தெரிந்தது. அதனால் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய முடிவெடுத்தோம். எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் மூலம் ரூ.70,000 வரை திரட்டி மருத்துவமனைக்குக் கொடுத்தோம். ஏற்கெனவே ரூ.10,000 கொடுத்திருந்ததால் பிரச்சினை ஏற்படவில்லை, இந்தூருக்குத் திரும்பும் வழியில் குழந்தை இறந்தது” என்றார் உறவினர் ஒருவர்.

இதனையடுத்து மத்தியப் பிரதேச மாநில முதன்மைச் செயலருக்கு புகார் அளிக்கப்பட்டு நாராயணா ஹெல்த் என்ற மருத்துவமனை உயிரைக்காப்பாற்றும் பொறுப்பை மறந்து பணம் கறப்பதிலேயே கவனம் செலுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக ஜனரோக்யா சாலுவலி என்ற அமைப்பின் அகிலா வாசன் கூறும்போது, “பிறந்து 20 நாட்களேயான உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த குழந்தையைக் காட்டி மத்தியப் பிரதேச அரசிடமிருந்து தங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகைக்காக நெருக்கடி அளித்துள்ளது. எனவே இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x