

மும்பை எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23ஆக அதிகரித்தது.
மும்பை கெம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்யேந்திர கனோஜா (40) இன்று சிகிச்சை பலனின்றி பலியானார். நேற்றைய நெரிசலின்போது தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சத்யேந்திர கனோஜியா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். தலையில் ஏற்பட்ட காயங்கள் மிகவும் பலமானதாக இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் கூறினர்.
17 பேரின் சடலம் ஒப்படைப்பு:
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 17 பேரது சடலம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி பிரவீன் பங்கார் கூறினார். காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் கூறினார். குறைவான காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 38 பேரும் தொடர் கண்காணிப்பில் இருப்பதால் அவர்களையும் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் திட்டமில்லை என்றார்.
பியூஷ் கோயல் ஆலோசனை:
மும்பையில் 100-க்கும் மேற்பட்ட புறநகர் ரயில் சேவைகளை துவங்கிவைப்பதற்காக நகரில் முகாமிட்டிருந்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே வாரிய உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நடக்காமல் இருப்பதற்கான திட்டங்களை வரவேற்பதாக அமைச்சர் கூறியதாக மேற்கு ரயில்வே ஊழியர் ஒருவர் கூறினார்.