Published : 04 Apr 2023 04:33 PM
Last Updated : 04 Apr 2023 04:33 PM
கேங்டாக்: சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 50 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சிக்கிமில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாதுலா மலை முகடுகள் உள்ளன. சீன எல்லையை ஒட்டிய இந்த பகுதிகளில் மார்ச் மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், நாதுலாவுக்குச் செல்லும் ஜெ.என். சாலையில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த சாலையின் 13வது மைலுக்கு அப்பால் செல்ல அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுற்றுலாப் பயணிகளில் பலர் தடையை மீறி 15வது மைல் வரை சென்றுள்ளனர். இதில், அவர்களில் பலர் பனிச்சரிவில் சிக்கி உள்ளனர். சுமார் 80 பேர் பனிச்சரிவில் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணியில் ராணுவம், காவல் துறை, உள்ளூர் மக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, சுமார் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 சுற்றுலாப் பயணிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில், 4 பேர் ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை. குறைந்தபட்சம் 50 சுற்றுலாப் பயணிகள் பனிச்சரிவில் சிக்கி இருக்கலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT