மேற்கு வங்கத்தில் இந்த மாதம் இந்தியா - அமெரிக்க விமான படைகள் போர் பயிற்சி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா, அமெரிக்க விமானப் படைகள் இந்த மாதம் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டா விமானப் படைத் தளத்தில் இந்த கூட்டு போர்ப் பயிற்சி ஏப்ரல் 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டுப் போர்ப் பயிற்சியில் இந்திய, அமெரிக்க விமானப் படைகளைச் சேர்ந்த பல்வேறு ரக விமானங்கள் ஈடுபடவுள்ளன. அதே நேரத்தில் இந்த பயிற்சியில் ஜப்பான் விமானப் படை பார்வையாளராக மட்டும் கலந்துகொள்கிறது. இரு நாட்டு விமானப் படைகளின் சாகசம் மற்றும் போர்த்திறன்களை ஜப்பான் விமானப் படையினர் பார்வையிட்டு பயிற்சி பெறவுள்ளனர்.

கலைகுண்டா மட்டுமல்லாமல் பனகர், ஆக்ரா, ஹிண்டன் விமானப் படைத் தளங்களில் இருந்தும் விமானங்கள் புறப்பட்டு பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

இந்திய விமானப் படையில் ரஃபேல், சுகோய்-30 எம்கேஐ, தேஜாஸ், சி-17 குளோப்மாஸ்டர்-3, ஐஎல்-78 போன்ற விமானங்களும், அமெரிக்காவின் சார்பில் எஃப்-15 ரக ஈகிள் ஜெட் விமானங்களும் பயிற்சியில் ஈடுபடும்.

இந்தியாவின் லடாக் கிழக்குப் பகுதிக்கு அருகே சீனா தொடர்ந்து தனது படைகளை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் சீன அரசு செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. பதிலுக்கு இந்திய எல்லையில் இந்திய ராணுவமும் துருப்புகளை நிறுத்தி உள்ளது. இந்நிலையில் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக இந்திய, அமெரிக்க விமானப் படைகளின் கூட்டு போர்ப் பயிற்சி நடைபெற்று வருகிறது என்று விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in