Published : 04 Apr 2023 04:35 AM
Last Updated : 04 Apr 2023 04:35 AM
சூரத்: பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத்தின் சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று ஜாமீன்
வழங்கியது. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை யும் நிறுத்திவைத்தது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து
திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார்.
இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த நிலையில், கடந்த மார்ச் 23-ம் தேதி ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.சர்மா தீர்ப்பளித்தார்.
இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. எனினும், உடனடியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டதுடன், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது. இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று மேல்முறையீடு செய்தார். தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒரு மனுவும், குற்றவாளி என்று அறிவித்ததை ரத்து செய்யக் கோரி மற்றொரு மனுவும் ராகுல் காந்தி தாக்கல் செய்தார்.
இந்த இரண்டு மனுக்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கினார். மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்தார். இந்த மனுக்கள் மீது வரும் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு புர்னேஷ் மோடிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றவாளி என அறிவித்ததை ரத்து செய்யக் கோரிய மனு மீது வரும் 13-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்தார். ராகுல் குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால், அவரது எம்.பி. பதவி தகுதி இழப்பு ரத்தாகும்.
இதுகுறித்து ராகுல் காந்தியின் வழக்கறிஞர் ரோகன் பான்வாலா கூறும்போது, “குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. தண்டனையையும் நிறுத்தி வைத்திருக்கிறது. ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது ராகுல் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேத்தன் ரேஷம்வாலா கூறும்போது, “ராகுல் காந்தியின் மனுக்கள் தொடர்பாக ஏப்ரல் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க மனுதாரர் புர்னேஷ் மோடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 13-ம் தேதி எங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்போம். குறிப்பாக, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்று வாதிடுவோம். அன்றைய தினம் வழக்கின் உண்மையான நிலை தெரியவரும்" என்றார்.
தொண்டர்கள் குவிந்தனர்: முன்னதாக, டெல்லியில் இருந்து விமானத்தில் ராகுல் சூரத் வந்தார். அவரது தங்கை பிரியங்கா காந்தியும் உடன் வந்தார். சூரத் விமான நிலையத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்டோர் ராகுலை வரவேற்றனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் சூரத் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். நீதிமன்ற வளாகம் மற்றும் சூரத் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க போராடுகிறேன். இந்தப் போராட்டத்தில் உண்மையே எனது ஆயுதம். உண்மையே எனக்குத் துணை. இந்தியாவுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன். இதற்காக என்ன விலை கொடுக்க வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு டெல்லியில் நேற்று கூறும்போது, “நீதித் துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் காங்கிரஸார் நாடகமாடி வருகின்றனர். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். காங்கிரஸைப் பொறுத்தவரை, நாட்டைவிட, குறிப்பிட்ட குடும்பத்தையே உயர்வாகக் கருதுகின்றனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT