ராம்நாத் கோவிந்த் காசிரங்கா சென்றபோது நிதி செலவிட்டதில் முறைகேடு நடந்ததாக புகார்: விசாரணைக்கு உத்தரவிட்டது அசாம் அரசு

ராம்நாத் கோவிந்த் | கோப்புப்படம்
ராம்நாத் கோவிந்த் | கோப்புப்படம்
Updated on
1 min read

குவாஹாட்டி: குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் காசிரங்கா தேசிய பூங்காவுக்கு சென்றபோது, வனவிலங்கு பாதுகாப்பு நிதியைதவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது மனைவி, மகளுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி 3 நாள் பயணமாக அசாம் சென்றார். காசிரங்கா தேசிய பூங்காவுக்கு சென்ற அவர்கள் கடைசி 2 நாள் இரவு அங்கேயே தங்கினர். காசிரங்கா பூங்காவை கண்டுகளித்தனர்.

இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் பயணம் தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ரோஹித் சவுத்ரி தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அளிக்கப்பட்ட பதிலில், “ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினர் 2 நாள் இரவு தங்கியதற்காக, வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 64 லட்சத்து 16 ஆயிரம் செலவிடப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் விளக்கம்

இதுகுறித்து அசாம் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி நேற்று கூறும்போது, “குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணத்தின்போது, வனவிலங்கு பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் ரவி சங்கர் பிரசாத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

அசாம் மாநில முதன்மை வனப் பாதுகாவலர் எம்.கே.யாதவா,வனவிலங்குகள் வார்டனாகவும் (கூடுதல் பொறுப்பு) பதவிவகித்தார். அவர் கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in