Published : 25 Sep 2017 09:56 AM
Last Updated : 25 Sep 2017 09:56 AM

வங்கதேசத்தில் இருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை தடுக்க மிளகாய் பொடியை பயன்படுத்தும் பிஎஸ்எப்

எல்லையில் ரோஹிங்கியா முஸ்லிம்களை தடுக்க பிஎஸ்எப் வீரர்கள் மிளகாய் பொடியை பயன்படுத்தி வருகின்றனர்.

மியான்மரில் ராக்கைன் மாகாணத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர். அங்கு ‘ஆரக்கன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி’ என்ற கிளர்ச்சிப் படை செயல்படுகிறது. இது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அங்கமாகக் கருதப்படுகிறது. அந்த கிளர்ச்சிப் படை கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்தி 12 பேரை கொலை செய்தது.

இதைத் தொடர்ந்து கிளர்ச்சிப் படை வீரர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த பின்னணியில் பெரும்பான்மை பவுத்தவர்களுக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. அங்கிருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அகதிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிம் கார்டு கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய ரோஹிங்கியா அகதிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதேநேரம் அகதிகள் போர்வை யில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளும், ஐ.எஸ். தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கின்றனர்.

எனவே நாட்டின் பாதுகாப்பு கருதி ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் நுழைவதை தடுக்க எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. அதையும் மீறி மேற்குவங்கத்துக்குள் ஊடுருவ அகதிகள் முயற்சிக்கின்றனர். அவர்களை தடுக்க மிளகாய் பொடியை பி.எஸ்.எப். வீரர்கள் பயன்படுத்தி வருகின் றனர்.

இதுதொடர்பாக பி.எஸ்.எப். வீரர் கூறியபோது, நூற்றுக்கணக்கில் ரோஹிங்கியா அகதிகள் வரும்போது மிளகாய் பொடி அடங்கிய கையெறி குண்டு களையும் அச்சுறுத்தும் ஒலி எழுப்பும் கையெறி குண்டு களையும் வீசி அவர்களை தடுத்து வருகிறோம் என்றார்.

மேலும் உருவ தோற்றத்தில் அகதிகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதால் வங்க மொழித் திறனை பிஎஸ்எப் வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பான்மையான ரோஹிங்கியா அகதிகள், தாங்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி பி.எஸ்.எப். வீரர்களுடன் வங்க மொழியில் பேசுகின்றனர். ஆனால் அகதிகளின் வங்கமொழி உச்சரிப்பு அவர்கள் ரோஹிங்கியா அகதிகள் என்பதை காட்டிக் கொடுத்துவிடுகிறது. அந்த வகையில் இதுவரை 175 அகதிகள் பிடிபட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிஎஸ்எப். வட்டாரங்கள் கூறியபோது, ஆயுதங்களால் அகதிகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க வங்கமொழித் திறனையும் உள்ளூர் உளவு தகவல்களையும் பயன்படுத்தி ரோஹிங்கியா முஸ்லிம்களை தடுக்கிறோம். அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதால் விழிப்புடன் செயல்படுகிறோம் என்று தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x