Published : 28 Sep 2017 07:17 PM
Last Updated : 28 Sep 2017 07:17 PM

தனக்கு எதிராக மகனை நிறுத்தினாலும் அரசுக்கு எதிரான விமர்சனத்திலிருந்து மாறாத யஷ்வந்த் சின்ஹா

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில் முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்திருந்தார், இதற்கு பதில் அளிக்கும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இவரது மகனும் மத்திய இணையமைச்சருமான ஜெயந்த் சின்ஹா மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்து கட்டுரை எழுதியுள்ளார்.

ஆனால் தனக்கு எதிராக தன் மகனை நிறுத்தினாலும், ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற ரீதியில் தன் கருத்துகள் சரியானதே என்று வாதிடுகிறார் யஷ்வந்த் சின்ஹா.

நொய்டாவில் தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்த யஷ்வந்த் சின்ஹா, “2014-க்கு முன்பாக பாஜக பொருளாதார விவகாரச் செய்தித் தொடர்பாளராக நான் இருந்தேன். அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பொருளாதாரக் கொள்கையை, ‘கொள்கை முடக்குவாதம்’ என்று வர்ணித்தோம். ஆனால் இந்த அரசு முடங்கிவிடவில்லை, சிலபல முடிவுகளை எடுத்துள்ளன. மக்கள் நலத்திட்டங்கள் மூலம் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும், இதில் இந்த அரசுக்கு குழப்பங்கள் நிலவுகின்றன. இது சரியல்ல” என்றார்.

நீண்டகாலமாகவே இந்தியப் பொருளாதாரம் சரிவு கண்டு வருகிறது. அனைவருக்கும் கரிசனை உள்ளது. அரசு செயல்படவில்லையெனில் அதை பொதுவெளிக்குக் கொண்டு வரவேண்டும் என்று நான் நினைத்தேன் என்றார் யஷ்வந்த்.

யஷ்வந்த் சின்ஹாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைக்குப் பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் உலகில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் பொருளாதாரம் என்றார்கள், இது பற்றி கேட்ட போது, “பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங்குக்கு பொருளாதாரம் நன்றாகத் தெரிந்திருக்கலாம். அதனால் இந்தியாதான் உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்கின்றனர், நான் அமைதியாக இதனை மறுக்கிறேன்” என்றார் யஷ்வந்த் சின்ஹா.

‘தந்தை-மகன் இடையே குடும்பச் சண்டை இல்லை’

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் யஷ்வந்த் மகன் ஜெயந்த் சின்ஹா எழுதியுள்ள கட்டுரை பற்றி யஷ்வந்திடம் கேட்ட போது, “இதில் குடும்பச் சண்டை எதுவும் இல்லை. சமீபத்தில் நான் அவரிடம் பேசவில்லை (மகனிடம்), அதனால் இவ்வாறு எழுது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டதா இல்லை தானாகவே எழுதினாரா என்பது பற்றி என்னால் கூறமுடியவில்லை. எப்படியிருந்தாலும் கொள்கை குறித்த அரசின் முடிவுகளை பறைசாற்ற அவரை நம்பியுள்ளனர் என்பது நிரூபணமாகிறது. நல்லதுதான் சரி, பின் ஏன் அவரை (மகன் ஜெயந்த் சின்ஹாவை) நிதியமைச்சகத்திலிருந்து நீக்கினார்களாம்?

பொருளாதார முன்னேற்றத்துக்கு அவசியமானது வங்கித் துறைகளை வலுப்பெறச் செய்ய வேண்டும். இது குறித்து நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கிறோம் என்றார் யஷ்வந்த்.

அரசின் செயல்பாடுகள் நாட்டுக்கு நீண்ட கால பயன்களை அளிக்கும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறதே என்று யஷ்வந்த் சின்ஹாவிடம் கேட்ட போது பொருளாதார அறிஞர் ஜான் மேனர்ட் கீன்ஸை மேற்கோள் காட்டி, “நீண்ட காலத்துக்குள் நாம் அனைவரும் இறந்து விடுவோம்” என்றார். இதைத்தான் மன்மோகன் சிங்கும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x