Published : 02 Apr 2023 09:49 AM
Last Updated : 02 Apr 2023 09:49 AM
போபால்: எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கம்விளைவிக்க தொடர்ந்து சிலர் முயற்சி செய்து வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
மத்தியபிரதேச மாநிலம் போபால் - புதுடெல்லி இடையேயான புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி போபால் நகரில் நேற்றுகொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
தற்போது போபால்-டெல்லி இடையே வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்தவந்தே பாரத் சேவையை தொடங்கிவைக்கும் நாள் ஏப்ரல் 1-ம் தேதி என என்னிடம் தெரிவிக்கப்பட்ட போது, ஒரு விஷயத்தை நான் உறுதியாக நினைத்தேன்.
இதுகுறித்த செய்தி வெளியாகும்போது நிச்சயம் இது பிரதமர் நரேந்திர மோடியின் `ஏப்ரல் ஃபூல்' என்று எனது காங்கிரஸ் நண்பர்கள் கூறுவார்கள் என்பதுதான் அது.
ஆனால், நீங்களே தற்போது இங்கு பார்க்கிறீர்கள். ஏப்ரல் 1-ம் தேதி திட்டமிட்டபடி வந்தே பாரத் ரயில் சேவை கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது நிபுணத்துவத்துக்கும் நம்பிக்கைக்குமான அடையாளம் என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.
இதற்கு முன்பு இருந்த அரசுகள் வாக்கு வங்கி அரசியலில்தான் கவனம் செலுத்தின. மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் அவர்கள் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் ஒரு குடும்பத்தையே முதல் குடும்பமாகக் கருதினர். நாட்டிலுள்ள இரண்டாவது, மூன்றாவது குடும்பங்கள் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. அவர்களாகவே அதில் இருந்து விலகிவிட்டனர்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியன் ரயில்வே அவல நிலையில் இருந்தது. குறைகளை தெரிவித்தாலும் தீர்வு கிடைக்காது என்பதால் குறைகளைச் சுட்டிக் காட்டுவதையே மக்கள் நிறுத்தி விட்டனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த கடந்த 9 ஆண்டுகளில், ரயில்வே பட்ஜெட் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்தியப் பிரதேசத்துக்கு மட்டும் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2014-க்கு முன்பு இது வெறும் ரூ.600 கோடியாக இருந்தது.
2014-க்குப் பிறகு எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கம் விளைவிக்க தொடர்ந்து சிலர் முயன்றுவருகின்றனர். இதை அப்பட்டமாகவே அவர்கள் செய்கின்றனர். மேலும் கூலிப்படை மூலம் என்னை கொல்லவும் சதி நடக்கிறது. ஆனால், தற்போது ஒவ்வொரு இந்தியனும் மோடிக்கு பாதுகாப்பு கவசமாக மாறி இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த புதிய வந்தே பாரத் ரயிலானது, டெல்லி-போபால் இடையே உள்ள 706 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும். நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 11-வது வந்தே பாரத் ரயிலாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT