Published : 31 Mar 2023 08:00 PM
Last Updated : 31 Mar 2023 08:00 PM

ராமநவமி ஊர்வல வன்முறை: மேற்கு வங்க ஆளுநரிடம் விவரம் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா

புதுடெல்லி: ராமநவமியை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் ஹவுரா மாநகரில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ராமநவமியை முன்னிட்டு ஹவுரா மாநகரில் நேற்றுமாலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக வேறொரு பிரிவினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அதோடு, அங்கிருந்த கடைகளையும் சூறையாடினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவத்தின்போது காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, கலவரக்காரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு அமைதி திரும்பிய நிலையில், ஷிப்பூர் பகுதியில் இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. கலவரத்திற்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி லாக்கெட் சாட்டர்ஜி, ''ஒவ்வொரு ராமநவமி மற்றும் துர்கா பூஜையின்பேதும் இந்துக்கள் தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதை ஏற்க முடியாது. ஹவுராவில் நேற்று கலவரம் நிகழ்ந்தபோது முதல்வர் மம்தா பானர்ஜி, வெறுமனே அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார். மம்தா பானர்ஜி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்'' என வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறையை கண்டித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ''ராமநவமி ஊர்வலத்தல் பங்கேற்றவர்கள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதில், பத்திரிகையாளர்கள் பலரும் காயமடைந்துள்ளனர். பத்திரிகையாளர்கள் காயமடைந்த போதும் மாநில அரசு வெறும் பார்வையாளராக இருந்து வருகிறது. இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்? இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அதோடு, ''ஊர்வலங்கள் நடத்தும்போது பாஜக பதற்றத்தை உண்டுபண்ணுகிறது. மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே வெளியில் இருந்து குண்டர்களை அக்கட்சி அழைத்து வருகிறது. ஒரு சமூகத்திற்கு எதிராக ஏன் தவறான வழியில் தாக்குதல்களை தொடுக்க வேண்டும்?தாங்கள் தாக்கப்படுவதாக உணர்ந்தால் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ஒருநாள் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்'' என அவர் குறிப்பிட்டார்.

இந்த கலவரம் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸிடம் தொலைபேசியில் உரையாடிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலவரம் தொடர்பாகவும், அதை அடுத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x