Published : 31 Mar 2023 02:16 PM
Last Updated : 31 Mar 2023 02:16 PM

குஜராத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ‘போஸ்டர்’ ஒட்டியதாக 8 பேர் கைது

புதுடெல்லி: குஜராத் மாநிலம், அமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாக 8 பேரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இது குறித்து அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸார் கூறியதாவது: "மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ" (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற முழக்கங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சட்டவிரோதமாக ஒட்டப்பட்டிருந்தன. இது குறித்த விசாரணையில் இந்தச் சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், நட்வர பாய் போபட் பாய், ஜட்டின் பாய், சந்திரகாந்த் பாய் பாட்டீல், குல்தீப் சரத்குமார் பாட், ரவிந்தர பாய் சர்மா, அஜய் சுரேஷ் பாய் சவுகான், அரவிந்த் கோர்ஜிபாய் சவுகான், ஜீவன் பாய் வசுபாய் மகேஷ்வரி, பர்தேஷ் வசுதேவ்பாய் துல்சியா என்பது தெரியவந்துள்ளது'' என்றனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் இசுதன் காத்வி கூறுகையில், "கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை, போலீஸாருக்கு பாஜக மீதுள்ள பயத்தைக் காட்டுகிறது” என்றார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவின் சர்வாதிகாரத்தைப் பாருங்கள்! குஜராத்தில், "மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ" என்ற போஸ்டர் ஒட்டியதற்காக ஆம் ஆத்மி கட்சியினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மோடி மற்றும் பாஜக மீதுள்ள பயம் காரணம் இல்லையென்றால் வேறு என்ன காரணம் இருக்க முடியும். நீங்கள் விரும்பும் அளவுக்கு கஷ்டப்படுத்துங்கள். ஆம் ஆத்மி தொண்டர்கள் தொடர்ந்து போராடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால், "ஆம் ஆத்மி கட்சி பிரதமர் மோடிக்கு எதிராக "மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ" என்ற போஸ்டர் பிரச்சாரத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்தின் தரத்தை உயர்த்தி, வேலையில்லா திண்டாட்டத்தை நீக்குவதற்கு பதிலாக, நாட்டின் ஜனநாயக அமைப்பை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிரான போஸ்டர் பிரச்சாரம் நாடுமுழுவதிலுமுள்ள 22 மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் மேற்கொள்ளப்படுகிறது.

பிரதமர் மோடி எப்படி விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினார். தொழிலாளர்கள், பல்கலைக்கழகங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உரிமையைப் பறித்தார் என்பதை நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்வதே இந்த போஸ்டர் பிரச்சாரத்தின் நோக்கமாகும். பிரதமர் மோடி நாட்டின் ஜனநாயகத்தினை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வரும் ஏப்ரல் 10-ம் தேதி, இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் இந்த போஸ்டர் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மார்ச் 23ம் தேதி, "மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தினை நடத்தியது. இதில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உரையாற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x