“தப்பி ஓடவில்லை; விரைவில் உலகின் முன் தோன்றுவேன்” - அம்ரித்பால் சிங்

“தப்பி ஓடவில்லை; விரைவில் உலகின் முன் தோன்றுவேன்” - அம்ரித்பால் சிங்

Published on

சண்டிகர்: தான் தப்பி ஓடவில்லை என்றும் விரைவில் உலகின்முன் தோன்றுவேன் என்றும் பஞ்சாபில் தேடப்பட்டு வரும் மத போதகர் அம்ரித்பால் சிங் தெரிவித்துள்ளார்.

அம்ரித்பால் சிங் மீது உள்ள வழக்குகள் காரணமாக அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்ட அம்ரித்பால் சிங், அதனைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''நான் தப்பி ஓடிவிட்டேன். எனது சகாக்களை நான் விட்டுவிட்டேன் என்று நினைப்பவர்களின் நினைப்பு தவறு. இது ஒரு மாயை. இதனை உண்மை என்று நம்ப வேண்டாம். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. விரைவில் உலகின் முன் தோன்றுவேன். தனியாக அல்ல; ஆதரவாளர்களோடு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த அறிவிப்பை அடுத்து, அவர் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலிலோ அல்லது பத்திண்டாவில் உள்ள குருத்வாராவிலோ தோன்றக் கூடும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக, இந்த இரண்டு பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அம்ரித்பால் சிங் தனது வீடியோவில், ''தான் நாட்டைவிட்டு ஓடுபவர்களைப் போன்றவர் அல்ல என்றும் கிளர்ச்சியில் ஒருவர் பலவற்றை சந்திக்க வேண்டி இருக்கிறது என்றும் இந்த கிளர்ச்சி நாட்களை கடப்பது கடினம்'' என்றும் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in