Last Updated : 31 Mar, 2023 10:31 AM

3  

Published : 31 Mar 2023 10:31 AM
Last Updated : 31 Mar 2023 10:31 AM

ராஜஸ்தானில் அமலான சுகாதார உரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: தனியார் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: ராஜஸ்தானில் அமலான சுகாதார உரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனியார் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ‘சுகாதார உரிமை சட்டம்’ காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அமலாகி உள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறிமுகமானது. இது கடந்த மார்ச் 21-ல் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமானது.

இந்த சட்டத்தின்படி, விபத்துகளில் படுகாயம் அடைந்தும் அல்லது பிற பாதிப்புகளுக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். முன்தொகை, சிகிச்சைக்கான தொகை, மருந்துகளுக்கான தொகை என எதையும் பெறக்கூடாது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும்.

இந்த சட்டத்திற்கு தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த சட்டம் அமலானது முதல் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சையை நிறுத்திவைத்து போராடி வருகின்றனர். கடந்த 4 நாட்களாக இவர்களின் போராட்டத்தால் ராஜஸ்தான் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில், தனியார் மருத்துவர்கள் சங்கம் மற்றும் இதர மருத்துவ அமைப்பினரையும் அழைத்து ராஜஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இரண்டு முக்கிய பிரிவுகளை வாபஸ் பெற முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு சம்மதித்துள்ளது.

சுகாதார உரிமை சட்ட விதிகளை

மீறும் தனியார் மருத்துவமனைகளின் உரிமங்களை அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் அல்லது அதன் உறுப்பினரே ரத்து செய்யும் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. இதை ரத்து செய்து, முன்பு இருந்தது போல், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அந்த உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச அவசர சிகிச்சைக்கான தொகையை மாநில அரசே அளிக்கவும் முன் வந்துள்ளது. எனினும் புதிய சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி போராட்டம் தொடர்கிறது. “தனியார் மருத்துவமனைகள் தொடங்க அரசிடம் இருந்து 54 வகை உரிமங்கள் பெற வேண்டி உள்ளது. இதன் பிறகும் புதிய சட்டம் தேவையா?” என தனியார் மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்தப் பிரச்சினையில் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக நடுநிலை வகிக்கிறது. நேரடியாக புதிய சட்டத்தை எதிர்க்காமல் போராடும் மருத்துவர்களை அழைத்துப் பேச வேண்டும் எனக் கூறி வருகிறது.

மக்கள் அவதி

இப்போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அரசு மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் திணறி வருகின்றனர். மருத்துவக் கல்லூரிகளின் மூத்த பேராசிரியர்கள் நேரடியாக மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை மாணவர்களும் தனியாருக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால், ராஜஸ்தான் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x