ராம நவமியையொட்டி திருப்பதி கோயிலில் சிறப்பு பூஜைகள்

உற்சவர், திருப்பதி
உற்சவர், திருப்பதி
Updated on
1 min read

திருப்பதி: ராம நவமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள அனைத்து ராமர் கோயில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

ஆந்திர மாநிலத்தில் ராம நவமி விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சீதாதேவி, ராமர், லட்சுமணர் மற்றும் அனுமனின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், மாலையில் அனுமன் வாகனத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதேபோல, திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற கோதண்டராமர் கோயிலிலும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரசாதமாக பானகம் வழங்கப்பட்டது. மேலும், திருப்பதி இஸ்கான் கோயில் உட்பட பல்வேறு வைணவ கோயில்கள், ஆஞ்சநேயர் கோயில்களில் ராம நவமியையொட்டி சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தன. சந்திரகிரி கோதண்டராமர் கோயிலில் நேற்று பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடப்பா ஒண்டி மிட்டா கோதண்டராமர் கோயிலில் நேற்று அங்குராற்பன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆந்திர அரசு தரப்பில் ராமர் கோயிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இங்கு ஏப்ரல் 4-ம் தேதி கருட வாகனமும், 5-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in