

உத்தரப் பிரதேசத்திலுள்ள மீரட் நகரில் இந்து - முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்த வன்முறையில் ஈடுபட்ட பஜ்ரங் தல் இந்து அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
ஒப்பந்தக்காரனான சதாம் (21), பட்டதாரி மாணவி கிருஷ்ணா இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை புதன்கிழமையன்று பதிவு செய்ததற்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த பஜ்ரங் தல் இந்து அமைப்பினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது பஜ்ரங் தல் அமைப்பினர் போலீஸார் மற்றும் வழக்கறிஞர் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, "தற்போது சதாமுக்கும், கிருஷணாவுக்கும் போலீஸ் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஹரியாணா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கிருஷ்ணாவின் பெற்றோர்கள் சதாம் மீது புகார் அளித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேற்கு உத்தரப்பிரதேசம் பஜ்ரங் தல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறும்போது, "லவ் ஜிகாத்துக்கு போலீஸார் வழிவகுக்கின்றன. ஒரு முஸ்லிம் இளைஞர் இந்து பெண்ணை மூளை சலவை செய்யவிடாமல் தடுத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை திருமணம் செய்ய நாங்கள் விட மாட்டோம்” என்றார்.