ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் முதல் கர்நாடகா தேர்தல் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 29, 2023

ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் முதல் கர்நாடகா தேர்தல் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 29, 2023
Updated on
3 min read

வேங்கைவயல் விவகாரம்: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பு: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை” எனத் தெரிவித்த நீதிபதிகள், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு நபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி சஸ்பெண்ட் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் புதன் கிழமை தெரிவித்தார்.

இதற்கிடையில், “காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட சேரன்மாதேவி காவல் அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

காவல் உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை உடனடியாக நிரந்தரப் பணிநீக்கத்திற்கு உட்படுத்த வேண்டுமெனவும், அவர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

‘தமிழகத்தில் கொலைகள் குறைந்துள்ளன’: தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சட்டம், ஒழுங்கு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

சபாநாயகருடன் அதிமுக கொறடா சந்திப்பு: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாகவும், இருக்கை விவகாரம் தொடர்பாகவும் அதிமுக தலைமைக் கொறடா எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை காலை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். இந்தநிலையில் சட்டப்பேரவையில் இப்போது இபிஎஸ் அருகில் உள்ள இருக்கையில்தான் ஓபிஎஸ் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு மே 10-ல் தேர்தல்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் புதன்கிழமை அதனை அறிவித்தார். அதன்படி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

“நீங்களா ஊழலுக்கு எதிரானவர்?” - மோடிக்கு கார்கே கேள்வி: “ஊழல் புரிந்த தனிநபர்களின் குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர்களின் மீது அமலாக்கத் துறையை ஏவி விடுகிறார்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசத்துடன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதானி உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டிய அவர், உங்களை ஊழலுக்கு எதிரானவராக காட்டிக் கொள்வதை நிறுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 75,321 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பதிவு: தமிழகத்தில் 75,321 வெளி மாநிலத் தொழிலாலர்கள் பதிவு செய்து உள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி சட்டத்திற்கு மேலானவரா?-அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி: ராகுல் காந்தி சட்டத்திற்கு மேலானவரா என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்துவிட்டதாலேயே இந்த நாட்டை ஆட்சி செய்வது தனது பிறப்புரிமை என ராகுல் காந்தி கருதுகிறார். அரசியல் சாசனம், நீதிமன்றம், நாடாளுமன்றம் என அனைத்திற்கும் மேலாக ராகுல் காந்தி தன்னை கருதிக்கொள்கிறார். நாட்டின் பிரதமர் வெளிநாடு சென்றிருந்தபோது, மசோதா நகலை கிழிப்பதுதான் அமைப்புகளை பலப்படுத்தும் செயலா என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். மசோதா நகலை கிழித்ததன் மூலம் அனைத்து அமைப்புகளுக்கும் மேலாக ராகுல் காந்தி தன்னை கருதிக்கொண்டிருக்கிறார் என்பது நிரூபணமாகி உள்ளது'' எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பரவல்: இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 5 மாதங்களுக்கு பின்னர் தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,903 -ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்றால் மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் தலா மூன்று பேரும், கர்நாடகாவில் ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

உடல் பருமன் மருந்துகளை ‘அத்தியாவசிய’ பட்டியலில் சேர்க்க பரிசீலனை: உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலானது குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளின் அரசாங்கங்களை மருந்து கொள்முதலில் வழிநடத்துகிறது. ஏதேனும் ஜெனரிக் மருந்துகள் இந்நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெறும்போது அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் முதன்முறையாக உடல் பருமன் தொடர்பான மருந்துகள் இடம்பெறலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதற்காக, உலக சுகாதார நிறுவனத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவானது அடுத்த மாதம் தொடங்கி உடல் பருமன் சிகிச்சை மருந்துகளை ஆய்வு செய்யும். பின்னர் செப்டம்பர் மாதம் புதுப்பிக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை வெளியிடும். ஒருவேளை பரிந்துரை ஏற்கப்பட்டால் புதிய பட்டியலில் உடல் பருமன் சிகிச்சை மருந்துகள் இடம்பெறும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in