Published : 29 Mar 2023 01:39 PM
Last Updated : 29 Mar 2023 01:39 PM

பயங்கரவாதத்துக்கான காரணங்களை நியாயப்படுத்தக் கூடாது: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அஜித் தோவல் பேச்சு

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதனை நியாயப்படுத்தக் கூடாது என்று பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. 2001-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் முழுமையான உறுப்பு நாடாக இந்தியா கடந்த 2017, ஜூன் 9-ல் இணைந்தது. தற்போது இந்த அமைப்பில் ஆப்கனிஸ்தான், பெலாரஸ், இரான், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. இவை மட்டுமின்றி, அர்மீனியா, அசர்பைஜான், கம்போடியா, நேபாள், இலங்கை, துருக்கி ஆகிய 8 நாடுகள் பேச்சுவார்த்தைக்கான பங்குதாரர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் 2023-ம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா கடந்த ஆண்டு ஏற்றது. அதன்படி, இந்த அமைப்பின் பல்வேறு மாநாடுகளை இந்தியா நடத்தி வருகிறது. சுற்றுலா வளர்ச்சிக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இந்த மாத தொடக்கத்தில் காசியில் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் பிரதிநிதி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான இன்றைய மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொடக்க உரை ஆற்றினார். அப்போது, ''சர்வதேச பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பயங்கரவாதமும், அதற்கான நிதி உதவியும்தான். பயங்கரவாதத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அது நியாயப்படுத்தப்படக்கூடியது அல்ல. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களும் நியாயப்படுத்தப்படக் கூடாதவையே'' எனத் தெரிவித்தார்.

முன்னதாக, மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை அஜித் தோவல் வரவேற்றார். இந்த மாநாட்டில், சீனா மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆன்லைன் முறையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு வரும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் 29ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு வரும் மே 4-5 தேதிகளில் கோவாவில் நடைபெற இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x